மியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் கடந்த ஆண்டு ஆட்சியை பிடித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச்சூட்டையும் மியான்மர் ராணுவம் நடத்த துணிந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மியான்மரில் பதற்றமான நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடுபவர்களை அந்நாட்டு ராணுவத்தினர் சட்டத்துக்கு புறம்பாக காவலில் வைக்கின்றனர். இதுவரை 11,787 பேர் காவலில் வைக்கப்பட்டனர். அவர்களில் 8,792 பேர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் செய்தித்தொடர்பாளர் ரவீணா ஷம்தாசனி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த ஓராண்டாக நடந்து வரும் போராட்டத்தில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போராட்டத்தில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையே. ராணுவ காவலில் வைத்து சித்திரவதை செய்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 இருக்கும்" என்றார் ஷம்தாசனி.
முன்னதாக, ராணுவ ஆட்சிக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்தது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் சேர்ந்து மியான்மரின் கூடுதல் அதிகாரிகளுக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இத்தடையை மூன்று நாடுகளும் விதித்துள்ளன.
தலிபான் அரசுக்கு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை - ரஷியா
தலிபான் அரசை அங்கீகரிப்பது குறித்து இப்போது பேசுவது சரியாக இருக்காது என்று ரஷிய வெளியுறவு துணை அமைச்சர் சர்கே வெர்ஷ்னின் தெரிவித்தார். சர்கேவும், மத்திய வெளியுறவு விவகாரங்களுக்கான மேற்கு செயலர் ரீனத் சாந்துவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆப்கன் விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷியாவும் இந்தியாவும் ஆப்கன் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் மக்களுக்கு இந்தியாவும், ரஷியாவும் உதவி செய்து வருகிறது. அது நிச்சயம் தொடரும்.
காரணம் அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் 20 ஆண்டுகளாக ஆப்கனில் தனது இருப்பை கொண்டிருந்தது. அதுவே தற்போதைய ஆப்கனின் கவலை நிலைக்கு காரணமாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராக இரண்டாவது ஆண்டாக நீடிக்கிறது.
முதலாவது ஆண்டில் கிடைத்த முடிவுகளை ஒப்பிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்க வேண்டியது எங்களின் பொறுப்பாகும். இந்திய பிரதிநிதியுடனான பேச்சுவார்த்தை நட்பு ரீதியில் அமைந்தது என்றார் சர்கே.
மக்களிடம் மன்னிப்பு கோரிய இங்கிலாந்து பிரதமர்
கொரோனா காலத்தில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கூட்டம் கூட்டியதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என்று இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தெரிவித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி இல்லத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் போரீஸ் ஜான்சன். அப்போது அரசு ஊழியர்கள் அதிக அளவில் திரண்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய தகவல்கள் அடங்கிய 12 பக்க முக்கிய அறிக்கை சமீபத்தில் வெளியானது. விசாரணையில் ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடந்தது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், பொதுமக்களின் கோபம் எனக்கு புரிகிறது, நான் செய்த தவறுக்காக வருந்துகிறேன். இதுபோன்ற தவறு இனி நிகழாமல் பார்த்துக் கொள்வேன் என்றார் ஜான்சன். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் பிரதமர் பதவியை விட்டு அவர் விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனியர்கள் மீது இனவெறி அடக்குமுறை: இஸ்ரேல் மீது அம்னெஸ்டி குற்றச்சாட்டு
இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச அரசு சாரா அமைப்பான அம்னெஸ்டி இன்டர்னேஷனல் மேற்கொண்ட ஆய்வு மற்றும் சட்டப்பூர்வ பகுப்பாய்வு அடிப்பைடையில் பாலஸ்தீனியர்கள் மீது இனவெறி அடக்குமுறையை இஸ்ரேல் கையாள்வதாக குற்றம்சாட்டியுள்ளது.
சிறுபான்மையினரான பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிடம் இருந்து கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு தனிநாடு கோரி வருகின்றனர். காஸா நகரை தலையிடமாகக் கொண்டு ஹமாஸ் பயங்கரவாத இயக்கமும் ஆயுதம் ஏந்தி பாலஸ்தீனியர்களுக்காக இஸ்ரேல் படையினருக்கு எதிரான ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது.
பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேஸ் படையினருக்கும் இடையேயும் அவ்வப்போது போராட்டங்கள் வெடிக்கும். இந்நிலையில், அம்னெஸ்டி இன்டர்னேஷனல் அமைப்பு 211 பக்க ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் இனவெறி அடக்குமுறை பிரயோகிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.
சட்டவிரோத கொலைகளும், பாலஸ்தீனியர்களை கட்டாய இடமாறுதல் செய்வதும், குடியுரிமை அளிக்காமல் மறுப்பதும், நிலத்தை அபகரிப்பதும் என பல மக்கள் விரோத செயல்களை இஸ்ரேல் செய்கிறது என்று அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேல் பதிலடி - இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் யயிர் லாபிட் கூறுகையில், இஸ்ரேல் மிகச் சரியாக இருக்கிறது என கூறவில்லை. ஆனால், இது ஒரு ஜனநாயக நாடு. சர்வதேச சட்டத்தை மதிக்கிற நாடு. இஸ்ரேல் யூத நாடு இல்லை என்றால் என்ற விவாதத்துக்கே நான் வர விரும்பவில்லை. அம்னெஸ்டியில் உள்ள யாருக்கும் அதை பற்றி விவாதிக்க தைரியம் கிடையாது என்றார்.
கடைசியாக கடந்த 2014ம் ஆண்டில் இஸ்ரேல்-பாலஸ்தீனியர்களுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் முதலீடு செய்ய வேண்டாம்: அமெரிக்க கோடீஸ்வரர் எச்சரிக்கை
சீனாவில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்க கோடீஸ்வரரான ஜார்ஜ் சோரோஸ் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் பேசியதாவது: சீனாவில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி சரிவைக் கண்டு வருகிறது.
முன்னணி சீன ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட், ரியல் எஸ்டேட் வளர்ச்சியை அடக்க நினைக்கும் சீன அரசின் கொள்கைகளால் கடனை திருப்பிச் செலுத்த திணறி வருகிறது. கடந்த ஆண்டு முதல் சீனாவில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி சரிவைச் சந்தித்து வருகிறது.
அங்கு ரியல் எஸ்டேட் துறை நிலையற்றத்தன்மையை கொண்டிருக்கிறது. உள்ளூர் அரசாங்கங்களுக்கு பலனளிக்கும் வகையில் கொள்கைகள் இருக்கிறது. தற்போதைய சூழ்நிலை சீனாவில் முதலீடு செய்வது திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம் நிலைமையை சரிசெய்வதற்கான வழி இருக்கிறது. ஆனால், அதை அவர் எப்போது செய்வார் என்பதே கேள்விக் குறியாக உள்ளது என்றார் ஜார்ஜ் சோரோஸ்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.