நடுக் கடலில் ஜப்பான் போர் விமானம் திடீர் மாயம் – பயிற்சியின்போது நேரிட்ட விபரீதம்
ஜப்பான் போர் விமானம் நடுக்கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாயமானது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தியில், ‘’கோமாட்ஸு விமானப் படைத் தளத்திலிருந்து நேற்று (ஜன.31) மாலை பயிற்சிக்காக 2 பேர் கொண்ட குழுவுடன் போர் விமானம் புறப்பட்டது. விமானப் படைத் தளத்திலிருந்து சுமார் 5 கி.மீ. சென்ற நிலையில், திடீரென விமானத்தின் ரேடார் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். கடலில் சில பொருட்கள் மிதப்பதை அவர்கள் கண்டறிந்தனர். விமானத்தின் பயணித்தவர்களில் சிலர் மீட்கப்பட்டனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை‘‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கடந்த 2019 ஆம் ஆண்டில் இதே போன்று போர் விமானம் கடலில் விபத்துக்குள்ளானது. அதன்பிறகு அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் நேரிட்டு வருகின்றன.
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு துருக்கி மையமாக பயன்படுகிறது-புலனாய்வு அறிக்கையில் தகவல்
இந்தியாவுக்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு மையமாக துருக்கி பயன்படுத்தப்படுவதாக புலனாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து டிரிபியூன் செய்தி இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ‘’கடந்த ஆண்டு வெளியான இரண்டு புலனாய்வு அறிக்கையில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் தூண்டுதலில் இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு துருக்கி மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மியான்மருக்கு புதிய தடையை விதித்த அமெரிக்கா
மியான்மரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து அந்நாட்டு ராணுவம் ஆட்சியை பிடித்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிச்சூட்டையும் மியான்மர் ராணுவம் நடத்த துணிந்தது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மியான்மரில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ராணுவ ஆட்சிக்காக வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் சேர்ந்து மியான்மரின் கூடுதல் அதிகாரிகளுக்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஓராண்டு ஆகின்ற நிலையில் இத்தடையை மூன்று நாடுகளும் விதித்துள்ளன.இந்த மூன்று நாடுகளும் ராணுவ ஆட்சி செய்து வரும் கமாண்டர் தலைவரான மின் ஆங்க ஹிலைங் மற்றும் பிற உறுப்பினர்களுக்கு பொருளாதார தடைகளை ஏற்கனவே விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரம்: அமெரிக்காவுக்கு பதிலளித்த ரஷியா
உக்ரைன் எல்லையில் போர் பதற்றத்தை தணிக்குமாறு அதிபர் பைடன் அரசு கொடுத்த தொடர் வற்புறுத்தலுக்கு ரஷியா செவிசாய்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியா வசம் இருந்த உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவுடன் இணைந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படத் தொடங்கியது.
ரஷியா பெரியதொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதைத் தொடர்ந்து பரம எதிரியான ரஷியா சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது.
அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் உக்ரைன் விவகாரத்தில் தொடர்ந்து ரஷியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழலில் தான் உக்ரைன் எல்லையில் நிலவி வரும் அசாதாரண சூழலை தணிக்குமாறு ரஷியாவுக்கு அமெரிக்கா கடிதம் எழுதியது.
அதற்கு எல்லை பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ரஷியா கடிதம் அனுப்பியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசிக்கு முழு அனுமதி
உலகம் முழுவதும் கொரோனாவின் கோரத் தாண்டவம் முழுமையாக முடிவுக்கு வராமல் இன்னும் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது.கோவாக்சின், கோவிஷீல்டு, பைசர் என பல தடுப்பூசிகள் வந்துவிட்டன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தடுப்பூசி போடுவதில் வேகம் காட்டி வருகின்றன. கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மாடர்னா தடுப்பூசிக்கு முழுமையான அனுமதியை அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அளிக்காமல் இருந்து வந்தது. அவசர கால பயன்பாட்டுக்கு மட்டுமே மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாடர்னா தடுப்பூசிக்கு முழு அனுமதி கிடைத்துள்ளதால் மக்கள் எவ்வித சந்தேகமுமின்றி இன்னும் ஆர்வமுடன் செலுத்திக் கொள்ள முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அதிகமாக செலுத்தப்பட்ட இரண்டாவது தடுப்பூசி மாடர்னா ஆகும். இது கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.