கனடாவில் கனமழை… நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்ட மூவரின் உடல்கள் மீட்பு
கனடாவில் கனமழை பெய்வதன் காரணமாக, பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி, நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்ட மூவரின் உடல்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
அதே சமயம், அந்நாட்டில் உணவு மற்றும் எரிபொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதீத கனமழை காரணமாக, அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியர் உட்பட மெக்ஸிகோ டிரக்கில் சிக்கிய 600 பேர்
மெக்ஸிகோவுக்குள் இரண்டு டிரக்களில் நுழைய முயன்ற ஒரு இந்தியர் உட்பட 600 பேரை, அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தேசிய இடம்பெயர்வு நிறுவனம் (INM)தெரிவித்துள்ளது. அதில், 401 பேர் குவாத்தமாலாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஐஎன்எம் கூற்றுப்படி, வெராக்ரூஸ் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு டிரக்கில் 12 நாடுகளை சேர்ந்த குடியேறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 455 பேர் ஆண்களும், 145 பேர் பெண்களும் ஆவர். காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள், ஒன்று வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் அல்லது முறைப்படி அவர்கள் தங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பியாவில் கடுமையான கட்டுப்பாடுகளிலும் அதிகரித்த கொரோனா
குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்றுக்கூடி கொண்டாடும் கிறிஸ்துமல் விழா வரவுள்ள சூழ்நிலையில், ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளை காட்டிலும் அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்து, தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கடுமையான சட்டங்களை மீண்டும் அமல்படுத்த சுகாதார துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தடுப்பூசி செலுத்துவதன் வேகத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
வெளியான மிஸ்ஸிங் சீன டென்னிஸ் நட்சத்திரத்தின் புகைப்படங்கள்
சீன அரசு தொலைக்காட்சியை சேர்ந்த ஊழியர் ஒருவர், மூத்த தலைவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டி காணாமல் போன டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாயின் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.
தொலைக்காட்சி ஊழியர் ஷென் ஷிவே, பெங் ஷுவா நண்பர்களுடன் உணவருந்தும் காணொலி, புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ரிட்டன்ஹவுஸ் விடுதலைக்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் போராட்டம்
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை, சுட்டுக்கொன்ற 18 வயதான இளைஞர் ரிட்டன்ஹவுஸ் பாதுகாப்பிற்க்காக சுட்டதாக விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, 200க்கும் மேற்பட்டோர் பேரணி சென்றனர்.
அந்த பேரணி, கலவரமாக மாறியதாக போர்ட்லேண்ட் சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போராட்டக்காரர்கள், ஜன்னல்களை உடைத்தும், காவல் துறை மீது கற்களை வீசியும் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இரவு 11 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றுள்ளார்.
கடந்தாண்டு, ஜார்ஜ் பிளாய்ட் காவல் துறையால் கொல்லப்பட்டதை கண்டித்து விஸ்கான்சினில் போராட்டம் நடைபெற்றது. அப்போது , கார் ஷோரூமில் பாதுகாப்பில் இருந்த கைல் ரிட்டன்ஹவுஸ், தன்னை தாக்கிய இருவரை தானியங்கி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.