கொரோனா பரவிய இடம் இதுதான்… உறுதிப்படுத்திய விஞ்ஞானிகள்
சீனாவின் வூகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் இருந்து தான் கொரோனா பரவியது என்று உலக சுகாதார அமைப்பு தெளிவுப்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் உருவானது. பின்னர், உலகம் முழுவதும் பரவியது. அதன் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. சீனாவில் உகான் நகரில் உள்ள ஹுனன் மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா உருவானதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் சீன அதிகாரிகள் கண்டறிந்தனர்.
கொரோனா உருவானது குறித்து கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பு ஆய்வு நடத்தியது. அதில், ஹுனன் மார்க்கெட்டில் வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டது. சீனாவில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸை செயற்கையாக சீனா உருவாக்கியதாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், விஞ்ஞானிகள் சிலர் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று 3 ஆய்வுகளை நடத்தினர். அவற்றின் முடிவுகளை வெளியிட்டனர்.
அவற்றில் 2 ஆய்வுகளில், வூகான் நகரில் உயிருடன் பாலூட்டி ரக விலங்குகளை விற்கும் ஹுனன் மொத்த மார்க்கெட்டில் இருந்துதான் கொரோனா பரவியதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மரபணு பகுப்பாய்வு மூலம் இதை கண்டறிந்து, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளனர். கொரோனா மாதிரிகளுக்கும், ஹுனன் மார்க்கெட்டுக்கும் இடையிலான தொடர்பை புவியியல் சார்ந்த பகுப்பாய்வு மூலம் உறுதி செய்துள்ளனர்.
3-வது ஆய்வில், அதே மார்க்கெட்டில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 தடவை கொரோனா பரவியதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், சீன ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஐ.நா. சபையின் சிறப்பு அவசர க் கூட்டம்: ரஷ்யா-உக்ரைன் மோதல்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் சிறப்பு அவசர கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ரஷ்யா, உக்ரைன் இடையே மோதல் ஏற்பட்டது.
குறிப்பாக, கூட்டத்தில் பேசிய உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா, ரஷியா மீது குற்றம் சாட்டினார். அப்போது அவர், ‘இந்த பிரச்சனையில் உக்ரைன் தப்பவில்லை என்றால், ஐ.நா.வும் தப்பாது. இந்த பிரச்சனையில் ஜனநாயகம் தோல்வியடைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது’ என குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ரஷிய தூதர் வாசிலி நபென்சியா, இந்த பிரச்சினைக்கு மூலகாரணமே உக்ரைன்தான் என குற்றம்சாட்டினார். மின்ஸ்க் ஒப்பந்தத்தின் கீழ் அதன் நேரடி கடமைகளை பல ஆண்டுகளாக உக்ரைன் மீறி வருவதாகவும் தெரிவித்தார்.
ரஷ்யா மீது பொருளாதார தடைகள்: சீனா எதிர்ப்பு
உக்ரைனில் படையெடுத்து உள்ளதால் ரஷியா மீது அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் பெரும்பாலான சர்வதேச நிதி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கட்டண முறையான ‘ஸ்விப்ட்’ அமைப்பில் இருந்தும் சில ரஷ்ய வங்கிகள் நீக்கப்பட்டு உள்ளன.
இந்த பொருளாதார தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஏற்கனவே கண்டித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவும் இந்த பொருளாதார தடை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பொருளாதார தடைகளை பயன்படுத்துவதை சீனா எதிர்க்கிறது. அதுவும் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக இத்தகைய தடைகளை கடுமையாக எதிர்க்கிறது’ என்று தெரிவித்தார்.
ஆஸி.யில் கனமழை: 8 பேர் பலி
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கனமழைக்கு 8 பேர் பலியாகினர்.
இந்த தொடர் கனமழையால் குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த 22-ந்தேதி முதல் பெய்து வரும் மழையால் தலைநகர் பிரிஸ்பேன் உள்பட பல நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
மாகாணம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மழை, வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.
சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒரு வாரகாலமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியது.
இதனிடையே மிக அதிகமான மழை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்துக்கு நகர்ந்து வருவதாகவும், இதனால் அங்குள்ள லிஸ்மோர் நகரம் வரலாற்றில் மிக மோசமான வெள்ள பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியானதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறையில் உள்ள போர் பயிற்சி
பெற்ற குற்றவாளிகள் விடுதலை:
உக்ரைன் அதிரடி
உக்ரைனில் போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை அந்நாட்டு அரசு போரில் ஈடுபடுத்துவதற்காக விடுதலை செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
உக்ரைன் அண்டை நாடுகளுக்கு செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்!
இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், போரில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் சிறையில் உள்ள போர் பயிற்சி பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்ய உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷிய படைகளை எதிர்த்து போரிட இந்த குற்றவாளிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
நியாயப்படி இது சுலபமான முடிவில்லை என்றபோதும் பாதுகாப்பு நிலைப்பாட்டில் பார்க்கும்போது நகரம் தாக்குதலுக்கு உள்ளாவதால் அதை பாதுகாக்க எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நியாயமானது தான்’ என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.