கொரோனா எனும் கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு தளர்த்தியுள்ளது. அமெரிக்க தொற்று நோய் பரவல் மற்றும் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு இந்தியாவுக்கு பயணம் செல்ல சில பரிந்துரைகளை வழங்கியது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக லெவல் 3: அதிக ஆபத்து என்ற நிலை அமலில் இருந்தது. தற்போது அதை லெவல் 1: ஆபத்து குறைவு என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அமெரிக்கர்களும் முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்திருக்க வேண்டும். இதன்மூலம், கொரோனாவை பரவுதலைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவுக்கு பயணம் செய்தால் உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படவும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது என்று அந்தப் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு எதிராக ரஷ்யா 2 வழக்குப் பதிவு
தடை செய்யப்பட்ட உள்ளடக்கம் இருந்ததாக குற்றம்சாட்டி கூகுள் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு எதிராக ரஷ்யா 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்யா தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறுகையில், யூ-டியூப் தளத்தில் தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்களை எடுக்கத் தவறியதற்காக கூகுள் நிறுவனத்துக்கு எதிராக நிர்வாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு எதிரான தவறான தகவல்கள் யூ-டியூப் தளத்தில் பரப்பப்படுவதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.
14 வருடங்களுக்கு மேலாக விமான நிலையத்தில் வசிக்கும் சீனர்
கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சீனாவின் பெய்ஜிங் விமான நிலையத்தில் ஒருவர் வசித்து வருகிறார்.
இவரது பெயர் ஜியான்குவா.
இவர், தனது குடும்பத்தைவிட்டு 2008ஆம் ஆண்டில் வெளியேறினார். அப்போது விமான நிலையத்துக்கு வந்த அவர் இதுவரை வீட்டுக்கு சென்றதே இல்லை. இங்கேயே அடுப்பு வைத்து சமைத்து சாப்பிட்டு, இங்கேயே தூங்கவும் செய்கிறார்.
அவருக்கு அரசு உதவித்தொகையாக மாதம் 1000- யுவான்களை வழங்கி வருகிறது.
இவர் வீட்டை வெளியேறியதற்கு காரணம் என்ன தெரியுமா? மது அருந்தவும், புகைக்கவும் வீட்டில் அனுமதி கிடையாதாம்.
அமெரிக்காவில் சங்கிலித் தொடர் விபத்து
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக பனிகொட்டியது. இதனால் நெடுஞ்சாலை முழுவதும் பனித்துகள்கள் குவிந்தன.
எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.
ரஷ்யா- உக்ரைன் போர்! கவனிக்க வைக்கும் சிறிய ரசெஸ்ஸோ நகரம்.. என்ன காரணம்?
சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியாமல், ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும் விபத்துக்குள்ளாகி கிடந்த வாகனங்கள் மீது மோதி கவிழந்தன.
இப்படி கார்கள், லாரிகள் உள்பட 50-க்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சங்கிலி தொடர் விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனிடையே பனிப்பொழிவில் கார்கள் மற்றும் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil