அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை வாங்க முடியவில்லை.
இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான அறிக்கை அளிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது . அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி 1 வாரம் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள்
உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் டிரோன்களை ஜப்பான் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகிறது. இந்த வேளையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி. சூட்டுகள் (அணு, உயிரி, ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரானவை), முக கவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது.
இதனால் ஜப்பான் ராணுவ அமைச்சகம், உக்ரைன் நாட்டுக்கு தனது அதிகபட்ச ஆதரவைத் தொடரும்” என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்
இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சாந்தி சேதி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்க கடற்படையில் 1993ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவரது தந்தையில் இந்தியாவில் இருந்து 1960 களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார்.
அண்டை நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ.338.. கொரோனா அப்டேட்.. மேலும் செய்திகள்
பாக்., புதிய சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
பாகிஸ்தானில் புதிய சுகாதார அமைச்சராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அப்துல் காதர் படேல் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்த வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அப்துல் காதர் படேலுக்கு ஜாமின் வழங்கி உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“