கனடாவில் அவசர நிலை பிரகடனம்
கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.
அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.
லாரி ஒட்டுநர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். லாரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது.
அதன்பின்னர், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தி அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தனர். இதனால், கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது.
இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோநாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதற்கு முன்பு 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கப்படவில்லை. அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், 'இந்த முற்றுகைகள் சட்டவிரோதமானது, நீங்கள் இன்னும் பங்கேற்கிறீர்கள் என்றால் வீட்டிற்குச் செல்வதற்கான நேரம் இது' என்று லாரி“ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தினார்.
கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 33.55 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக அதிக எண்ணிக்கையிலானோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 33.55 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக நம்பிக்கை தரும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 37 லட்சத்து 56 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 24 லட்சத்து 7 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 55 லட்சத்து 5 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 43 ஆயிரத்து 766 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி
ஒமைக்ரான் வகை கொரோனாவால் சீனாவில் புதிதாக அந்த நோய் பாதிப்பு ஏற்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மட்டும் 1,347 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
பெருகும் நோயாளிகளின் எண்ணிக்கையை சமாளிக்க மருத்துவமனைகள் திணறுவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்வீடனில் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு 4-ஆவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
உக்ரைன் விவகாரம்: ரஷியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்: ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியா தயாராக இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியா வசம் இருந்த உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவுடன் இணைந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படத் தொடங்கியது.
ரஷியா பெரியதொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதைத் தொடர்ந்து பரம எதிரியான ரஷியா சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷியா எங்கள் மீது நாளை (பிப்.16) தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதேபோல் பிரான்ஸ் அரசும் ரஷியா ராணுவத் தளவாடங்களுடன் உக்ரைன் எல்லையில் போர் தொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷியா போர் தொடுத்தால் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளள நேரிடும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள், பிற மேற்கத்திய நாடுகள் மற்றும் கூட்டணி நாடுகள் எச்சரித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் யான்-யூவெஸ் டிரையன் கூறுகையில், அனைத்து ராணுவத் தளவாடங்களும் உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்குமா என்றால் அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் சிறை: சவூதி அரேபியா எச்சரிக்கை
வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்பினால் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா கிரைம் பிரான்ச் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தியில், வாட்ஸ்அப்பில் இதய எமோஜி அனுப்புவது துன்புறுத்தல் குற்றம் ஆகும்.
சிலர் இதுபோன்ற துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளளனர்.
அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிறரை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இதய எமோஜியை யாருக்காவது அனுப்பினால் 1,00,000 ரியால் ( ரூ.20 லட்சம்) அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மீண்டும் மீண்டும் இதே தவறை செய்யும்பட்சத்தில் 300,000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கிரைம் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.