உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர்7-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
உக்ரைனின் கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருகின்றன.
ஆனால், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை நேரடியாக ரஷியாவை எதிர்த்து இதுவரை சண்டையிடவில்லை.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், சர்வாதிகாரிகள் அவர்கள் செய்த ஆக்கிரமிப்பு செயலுக்கு விலை கொடுக்காதபோது அவர்கள் மேலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர் என்பதை நமது வரலாற்றின் மூலம் நாம் அறிந்துள்ளோம். அவர்கள் தொடர்ந்து முன்னேறி கொண்டே சென்று அமெரிக்கா மற்றும் உலகிற்கு அதிக செலவு, அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடுகின்றனர்.
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என புதின் நினைத்துவிட்டார். புதின் தவறாக நினைத்துவிட்டார். நாங்கள் தயார் என்றார்.
இதனால் அமெரிக்காவும் சண்டையில் ஈடுபடுமா என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 37 கோடி
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.08 கோடியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேநேரம் உலகம் முழுவதும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 43.83 கோடியை தாண்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
உலகம் முழுவதும் தற்போது 43,83,96,328 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,08,63,437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 59 லட்சத்து 83 ஆயிரத்து 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்திய அளவிலும் பாதிப்பு குறைந்துள்ளது.
உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப மாட்டோம்: போலந்து அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப மாட்டோம் என்று போலந்து அதிபர் அன்ட்ரெஜ் துடா தெரிவித்தார்.
முன்னதாக, உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த 27-ந் தேதி முடிவு செய்தனர்.
இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடான போலந்து, உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப மாட்டோம் என்று கூறியுள்ளது.
இதுகுறித்து போலந்து அதிபர் அன்ட்ரெஜ் துடா கூறியதாவது:-
ரஷ்யா-உக்ரைன் போரில் போலந்து இணையவில்லை. நேட்டோ அமைப்புக்கும் இதில் சம்பந்தம் இல்லை. உக்ரைனுக்கு நாங்கள் மனிதாபிமான உதவி அளித்து வருகிறோம். இருப்பினும், போர் விமானங்களை அனுப்ப மாட்டோம். அப்படி அனுப்புவது போரில் தலையிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.
உக்ரைன் நிலவரம் குறித்து விவாதிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை இன்று போலந்து அதிபர் நடத்துகிறார்.
உக்ரைனில் ரயில்களில் இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு
உக்ரைன் ரயில்களில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போர் நடைபெற்று வருகிற உக்ரைன் தலைநகரான கீவ் நகரில் ரயில்களில் இந்தியர்களும், பிற வெளிநாட்டினரும் பயணிக்க அனுமதி மறுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சித் தகவலை இந்திய மாணவர் ஆன்ஷ் பண்டிதா வெளியிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "இந்தியர்களையோ, பிற வெளிநாட்டினரையோ ரயிலில் ஏற ரயில்வே காவலர்கள் அனுமதிப்பதில்லை. இங்கு (வோக்ஜல் ரெயில் நிலையம்) எவ்வளவு கூட்டம் இருக்கிறது பாருங்கள். இங்கே சலசலப்புகள், கைகலப்புகள் நடக்கின்றன. இந்தியர்கள் இங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்று எல்லோரும் பயப்படுகிற நிலையில் நாங்கள் நமது கொடியுடன் இங்கே இருக்கிறோம்" என கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, " எங்களை விரைவாக இந்தியத் தூதரகம் வெளியேற்றும் என்று நம்புகிறோம். இந்தியத் தூதரகம் விரைவாக எங்களை வெளியேற்றி நாங்கள் வீடு செல்ல வழிவகுக்க வேண்டும்" என்றும் கூறி உள்ளார்.
முக கவசம் அணிவது கட்டாயமில்லை: ஓமன் அரசு அறிவிப்பு
ஓமனில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஓமனுக்கு வருபவர்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை, ஆனால் வாகனங்கள், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மூடப்பட்ட பகுதிகளில் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் 70 சதவீதம் பேர் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர் துல்லிய தாக்குதலுக்கு ரெடியான ரஷ்யா… லேட்டஸ்ட் 5 நிகழ்வுகள்!
மேலும் அனைத்து கல்வி நிலையங்களிலும் வரும் 6 ஆம் தேதி முதல் 100 சதவீத மாணவர்களுடன் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.