கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
கிழக்காசிய நாடான வட கொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, ‘வாசோங் – 17’ பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்ககாவை தகர்க்கும் திறனுடைய இந்த ஏவுகணையை வட கொரியா பரிசோதித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் வாசோங் – 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
உலக நாடுகளில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,28,11,873 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41,73,50,104 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,94,45,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 61,51,003 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 13,544 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் 130 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக முழு ஊரடங்கு ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவற்றை ஷாங்காய் நிர்வாகம் மூடியது. இதனால், போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று அந்த அரசு கருதுகிறது.
புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது: பைடன்
புதின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறியதற்கு, தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புதின் முயற்சிக்கிறார். ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று பட்ஜெட் முன்மொழிவை வெளியிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் எனது கருத்துகளுக்கு பின்வாங்கவில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கவில்லை. அவர் (ரஷிய அதிபர் புதின்) அதிகாரத்தில் இருக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியும், கெட்டவர்கள் தொடர்ந்து கெட்ட செயல்களை செய்யக்கூடாது.” என்று ஜோ பைடன் கூறினார்.
இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவி கோரும் இலங்கை
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்த இலங்கையின் பொருளாதாரம், கொரோனா தொற்றால் 90 சதவீத பாதிப்புக்கு உள்ளானது. அன்னியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது.
மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடி வருகின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலக்கரி வாங்குவதற்கு கூட நிதி இல்லாததால், மின் உற்பத்தி முடங்கி உள்ளது. தினசரி பல மணி நேர மின்வெட்டு உள்ளது.
இலங்கைக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டி வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடன் கேட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவிடம் மேலும் 1 பில்லியன் டாலர் கடனுதவியை இலங்கை கோரியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இலங்கை அரசு இந்த கடனுதவியை கேட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“