ர
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!
உக்ரைனில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சலின் அவசரக் கூட்டம் கூடியுள்ளது.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன.
தங்கள் நாட்டின் மீது ரஷியா படையெடுத்துள்ளதாக ஐ.நா. கவுன்சலில் உக்ரைன் பிரதிநிதி தெரிவித்தார்.
உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக் கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.
இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷிய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
உக்ரைனில் உள்ள ரஷிய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.இதனை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போரை தொடங்கியது ரஷியா: அச்சத்தில் மக்கள்; உக்ரைன் நிலவரம் என்ன?
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று 54,809 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71,377 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மேலும், ஒரே நாளில் 2,420 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றைய பலி எண்ணிக்கையை விட இது அதிகம். நேற்று 1,443 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 9,66,393 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8.03 கோடியை கடந்தது.
உலகின் பிற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஜெர்மனியில் நேற்று 1.58 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2.19 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷியாவில் நேற்றைய பாதிப்பு 1.35 லட்சம் ஆக இருந்த நிலையில், புதிதாக 1.37 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
பிரேசிலில் நேற்று 1 லட்சத்து ஆயிரத்து 285 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 626 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.97 கோடியாக உயர்ந்தது. உலக அளவில் 59.35 லட்சம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 35.84 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் கடும் வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு
தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாகாணத்தில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை இடைவிடாது கனமழை பெயதது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துவிட்டது.
இப்படி ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாகாணத்தில் உள்ள ஆறுகள் உள்ளிட்ட பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ள நீரானது, ஊருக்குள் புகுந்ததில், மண்சரிவுகள் ஏற்பட்டு பல வீடுகள் மூழ்கி போயின. குறிப்பாக இந்த கனமழையால் அங்குள்ள மலைபிரதேசமான பெட்ரோபோலிஸ் பிராந்தியம் கடுமையான பாதிப்புகளான எதிர்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நூற்றுக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டன. அதே போல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனிடையே கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தின் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.
தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
கனடாவில் அவசர நிலை பிரகடனம் ரத்து
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.
அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.
லாரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது.இந்த சூழலில் லாரி டிரைவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து போராட்டக்காரர்களின் லாரிகளையும், அவர்கள் அமைத்திருந்த
தற்காலிக கூடாரங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதன் மூலம் பல நாட்களாகக் கனடா தலைநகரில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் கனடாவில் தற்போது லாரி டிரைவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, அவசர நிலை பிரகடனம் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் டுருடோ அறிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கு மலிவு விலையில்
இந்தியா தடுப்பூசி - பில்கேட்ஸ் பாராட்டு
உலக நாடுகளுக்கு மலிவு விலையில் இந்தியா தடுப்பூசி அளித்துள்ளது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம், இந்திய- அமெரிக்க சுகாதார கூட்டாண்மை குறித்து காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது.
உலக நாடுகளுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகள் கிடைக்க, இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.
இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு இந்தியா 15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு வழங்கி உள்ளது. இந்த தருணத்தில் இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றி.
கொரோனா பெருந்தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.