போலந்துக்கு செல்ல ஜோ பைடன் திட்டம்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்துக்கு செல்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 26-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனிடையே, ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். குறிப்பாக, உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
போலாந்து நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள நிலையில், உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதும் அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், உக்ரைனில் இருந்து வரும் அகதிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போலாந்து பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 25-ம் தேதி (வெள்ளிக்கிழமை) போலாந்து நாட்டிற்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தின் போது போலாந்து அதிபர் ஆண்ட்ரிச் டூடாவை ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை
வடகொரியா நேற்று பீரங்கி குண்டுகளை வீசி சோதனை செய்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பீரங்கி குண்டுகள் கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணையை முழுமையாக சோதிக்க தயாராகி வருவதாக அமெரிக்க குற்றம்சாட்டி வரும் நிலையில், வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா, தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை திரும்பப்பெற அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாகவும் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
எப்போதும் இல்லாத வகையில் மோடி அரசுக்கு பாகிஸ்தான் பிரதமர் பாராட்டு.. என்ன காரணம்?
15,000 ரஷ்ய வீரர்கள் பலி: உக்ரைன் ராணுவம்
25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய படை வீரர்கள் கொல்லப்படுவது தொடர்கிறது. இதுவரை நடந்துள்ள 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷியாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 76 லட்சத்து 66 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 40 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்து 296 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 497 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil