இந்தோனேஷியாவில் ராட்சத அலை: 11 பேர் பலி
இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் 20-க்கும் அதிகமானோர் பங்கேற்று கடற்கரையில் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது.
இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் அதற்குள் 12 பேர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர். மாயமான 11 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். எனினும் பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவர்கள் 11 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
ஜெர்மனி அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு
ஜெர்மனி நாட்டின் அதிபராக பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் அதிபரை தேர்வு செய்யும் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் கீழவை மற்றும் 16 மாகாணங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இதில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று பிரான்க் வால்டர் ஸ்டீன்மையர் இரண்டாவது தடவை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் பிரான்க் கூறியதாவது,
ஜனநாயகத்திற்காக போராடுபவர்களுக்கு பக்கத்தில் நான் இருப்பேன். ரஷியா-உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருவது அந்த நாட்டுக்கு ஆபத்து. அங்கு உள்ள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை அழிக்க எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு: நியூசிலாந்தில் வலுக்கும் போராட்டம்
கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றே வழி என பல நாடுகள் கருதுகின்றன. இதனால் தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவர்கள் கட்டாய தடுப்பூசி என்பது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் பல நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் தலைநகர் வெலிங்டனில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று நாடாளுமன்றம் முன்பு போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 33.25 கோடியாக உயர்வு
சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் அந்த வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 20 லட்சத்து 76 ஆயிரத்து 86 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 36 லட்சத்து 67 ஆயிரத்து 911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 33 கோடியே 25 லட்சத்து 75 ஆயிரத்து 46 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 33 ஆயிரத்து 903 பேர் உயிரிழந்தனர்.
ரஷிய எல்லைக்குள் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறல்
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் நீர் மூழ்கிக் கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷியாவின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ்’ போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷிய கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததை ரஷிய கப்பல் கண்டறிந்தது.
அதைத் தொடர்ந்து, கடலின் மேற்பரப்புக்கு வரும்படி விடுத்த கோரிக்கையை அமெரிக்க கப்பல் நிராகரித்தது. இதையடுத்து, ரஷிய போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் அமெரிக்க கப்பலை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர்.
அதன் பின்னர் அமெரிக்க கப்பல் முழு வேகத்தில் அங்கிருந்து வெளியேறியது. இந்த சம்பவம் தொடர்பாக ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷிய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.