- நிழல் உலகில் செயல்படும் பேஸ்புக் மீது விசாரணை வேண்டும்
பிரபல சமூக ஊடகமான பேஸ்புக், குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்த வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செனட் விசாரணையின் போது, பிரான்சஸ் ஹாகன் கூறுகையில், "பேஸ்புக் தனது பயனாளர்களை ஹோம்பேஜ்ஜில் ஸ்க்ரோலிங் செய்யவைத்து, விளம்பரங்களைப் பார்த்திட தூண்டுகிறது. பேஸ்புக் நிறுவனம் நிழல் உலகில் செயல்படும் வரை, அதன் ஆய்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியாகாது. நம்மால் கணக்கிடவும் இயலாது. நிறுவனத்தின் தலைமைக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எப்படி பாதுகாப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள்.
ஆனால் தேவையான மாற்றங்களைச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் வணிக லாபத்தை மக்கள் முன் வைத்துள்ளனர். இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற நடவடிக்கை தேவை" என்றார். இவர் பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவில் முன்னாள் மேலாளர் ஆவர்.
- தைவான் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளுங்கள் - சீன அதிபருடன் பேசிய பைடன்
சீன அதிபருடன் தொலைப்பேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன், தைவான் ஒப்பந்தப்படி நடந்துகொள்வதாக இருதரப்பினரும் பேசித் தீர்வு கண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
சீனா தைவானை தனது நாட்டிற்கு சொந்தம் என கூறுகிறது. ஆனால், தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடு என்றும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறுவதால், இரு தரப்பினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய தினத்தன்று, தைவான் ராணுவத்திற்குட்பட்ட 5 இடங்களில் 148 சீன விமானங்கள், வட்டமடித்ததாகப் புகார்கள் எழுந்தது.
- முதன்முறையாக இங்கிலாந்து அதிகாரிகளைச் சந்தித்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமலானதைத் தொடர்ந்து, முதன்முறையாக இங்கிலாந்து அதிகாரிகளை அவர்கள் நேரில் சந்தித்தனர். இதன் மூலம், பொருளாதார வீழ்ச்சியால் கடும் பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானின் பண தேவை சரிசெய்யப்படும் என கூறப்படுகிறது.
இந்த சந்திப்பானது வர்த்தக உறவுகள் குறித்து ஈரான் தூதர்கள் குழுவுடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஒருநாள் கழித்து, நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பண்டோரா பேப்பர்ஸ்: பாகிஸ்தான் அரசியலைப் பாதிக்குமா?
தற்போது வெளியான பண்டோர் பேப்பர்ஸ் புலனாய்வு விசாரணை அறிக்கையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. (ICIJ) பகிரப்பட்ட ஆவணங்களில், உலக தலைவர்கள், ராணுவ தளபதிகள், கோடீஸ்வரர்கள் என நூற்றுக்கணக்கானோர் மில்லியன் கணக்கான பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
வெளியிடப்பட்ட ஆவணங்களில், 700க்கும் மேற்பட்ட முக்கிய பாகிஸ்தானியர்கள் பெயரிடப்பட்டனர். இருப்பினும், கானின் பெயர் பத்திரிகைகளில் குறிப்பிடப்படவில்லை. பெருகிய ஊழலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தே, பிரதமர் இம்ரான் கான் 2018 இல் ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2022 வரை சுற்றுலாப் பயணிகளுக்கு நோ என்ட்ரி - ஆஸ்திரேலியா திட்டவட்டம்
2022ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா வர அனுமதி இல்லை என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். கடந்த வாரம், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆஸ்திரேலியா குடிமக்கள் வரலாம் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு வரை வர இயலாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியா வரும் புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil