ஆப்கான் கந்தஹார் குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு
Advertisment
ஆப்கானில்தான் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அறிக்கைப்படி, இரண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள், மசூதி வெளியே இருந்த காவலர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, உள்ளே சென்றுள்ளனர். அங்கு, இரண்டு குழுக்களாக தொழுகையில் ஈடுபட்டவர்கள் இடையே குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அங்கு 300க்கும் மேற்பட்டார் கூடியிருந்தனர். முன்னதாக, கடந்த வாரமும் மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அமெரிக்கா அனுமதி
வெள்ளை மாளிகை அறிக்கையின்படி, வரும் நவம்பர் 8 ஆம் தேதி முதல் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவிற்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 21 மாதத்திற்குப் பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில், 2020 ஜனவரியில் சீன பயணிகள் வருகைக்கு விதிக்கப்பட்ட தடை, படிப்படியாகப் பல நாடுகளுக்கு அதிகரிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்தாலும், அங்கு கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.
பிரிட்டன் எம்.பி தேவாலயத்தில் படுகொலை
பிரிட்டன் எம்.பி. டேவிட் அமெஸ்(69), எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்கு வாக்குகளைச் சேகரிக்க சென்றிருந்தார். அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர், அவரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அந்நபரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்நபருக்குப் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
ட்ரோன் தாக்குதலில் இறந்த ஆப்கானியர்களுக்கு அமெரிக்கா நிவாரண உதவி
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 10 பேர் இறந்தனர். அந்த தாக்குதலில் இறந்தவர்கள் அப்பாவிகள் என பென்டகன் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், இறந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இருப்பினும், தொகை குறித்து விவரங்கள் வெளியிடவில்லை.
கிளிண்டன் உடல்நிலையில் முன்னேற்றம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், இன்னும் ஒரு நாள் அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெறவேண்டும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதாகும் அவர், கடந்த 1993 முதல் 2001-ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil