உலக செய்திகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய நிகழ்வுகள் என்ன?

உலகளவில் ஓவர்நைட்டில் நடந்த 5 முக்கிய சம்பவங்களை பார்த்து தெரிஞ்சுக்கோங்க…

1. தாலிபானின் உயர்நிலைக் குழுவைச் சந்தித்த இந்தியக் குழுவினர்
ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் அப்துல் சலாம் ஹனாஃபி தலைமையிலான தாலிபான் உயர்நிலைக் குழுவினர் ரஷியாவில் இந்தியக் குழுவை சந்தித்து பேசியுள்ளனர்.

ரஷ்யாவின் அழைப்பு ஏற்றுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்- ஈரான் பிரிவு இணைச் செயலர் ஜெ.பி.சிங் தலைமையிலான குழுவினர், தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தாலிபான் செய்தித் தொடா்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு குறித்து இந்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்தது என முஜாகித் கூறியுள்ளார்.

2. பாதுகாப்புப் படையினர் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் –  நால்வர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பஜூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வாகனம் வந்த போது, சக்திவாய்ந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில், நான்கு வீரர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தான் தாலிபான்களுக்கான தளமாக இந்த பகுதி செயல்பட்டு வந்தது. ஆனால், அங்கிருந்த கிளர்ச்சியாளர்கள் அனைவரையும் அப்புறப்படுத்திவிட்டோம். ஆனாலும், வன்முறைகள் தொடர்ந்து நிகழ்வதாக ராணுவத்தினர் கூறுகின்றனர்.


3. நேபாளம் வெள்ளப்பெருக்கில் இதுவரை 77 பேர் பலி
நேபாளத்தில் கடந்த 3 நாள்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் இதுவரை 77 பேர் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

பஞ்ச்தார் மாவட்டத்தில் 24 பேரும், இலத் பகுதியில் 12 பேரும், தோதியில் 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும் உள் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

4. கேபி பெடிட்டோ சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தில் காதலரின் பொருள்கள்

வ்யோமிங் பகுதியில் கேபியின் அங்க அடையாளங்களுடன் ஒத்துப் போகும் சடலம் மீட்கப்பட்ட இடத்தில், காதலர் ப்ரையன் லௌண்ட்ரிக்கு சொந்தமான பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக  எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது. ப்ரையனின் பேக் மற்றும் நோட்புக் கண்டறியப்பட்டுள்ளது.
கேபி பெடிட்டோ இந்தாண்டு ஜூன் மாதம் தனது காதலர் ப்ரையன் லௌண்ட்ரியுடன் நியூயார்க்கில் இருந்து வேனில் மேற்கு மாகாணங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடைசியாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிட்ட கேபியை அன்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது. அவருடன் பயணித்த ப்ரையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


5. பாலியல் வீடியோ மிரட்டல் வழக்கில் சிக்கிய பென்சிமா

ரியல் மாட்ரிட் நட்சத்திரம் கரீம் பென்சிமா, முன்னாள் பிரான்ஸ் அணி வீரர் மதியூ வால்புனாவை பாலியல் வீடியோ மூலம் மிரட்டிய வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் அலுவல் சார்ந்த பணி காரணமாக நீதிமன்றத்திற்கு வரமுடியவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறினார். 


பென்சிமா மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 75,000 யூரோ ($ 87,400) அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், பென்சிமா தன் மீதான குற்றத்தை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and International news here. You can also read all the International news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: World news today pakisthan bombblast nepal flood real madrid star sex tape case

Next Story
வடகொரியா ஏவுகணை சோதனை! கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்!!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com