உக்ரைன் மீது அடுத்த வாரம்
ரஷியா படையெடுக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷியா அடுத்த வாரம் படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலக நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன.
இதனால் உக்ரைன் எல்லையில் ரஷியா ராணுவ வீரர்களையும், போர் தளவாடங்களையும் குவித்துள்ளது. இதனால், எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ரஷியா மறுத்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் என அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, உக்ரைனில் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் “படையெடுப்பு வான்வழி தாக்குதலில் இருந்து தொடங்கலாம், இது அங்கிருந்து நீங்கள் புறப்படுவதை கடினமாக்கும் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடியாக வெளியேறுவது நல்லது” என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே படையெடுப்பு குறித்து அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலகநாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் உக்ரைனுக்கான ரஷிய தூதர் மற்றும் அங்குள்ள ரஷிய தூதரகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று முதல் அங்கிருந்து வெளியேற தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி உக்ரைன்-ரஷியா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டி வரும் நிலையில் அச்சுறுத்தலை சமாளிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு வலு சேர்ப்பதற்காக போலந்து நாட்டின் எல்லைக்கு அமெரிக்கா கூடுதலாக 3 ஆயிரம் படை வீரர்களை அனுப்பி வைத்துள்ளது.
ஆப்கனில் கடத்தப்பட்ட 2 செய்தியாளர்கள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகத்துக்கு முன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அந்தச் செய்தியை சேகரிப்பதற்காக அங்கு சென்ற இரண்டு செய்தியாளர்கள் காணாமல் போயினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கன் அரசு தான் அவரை சிறையில் வைத்தது என்று தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து, ஐ.நா. அமைப்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு அவர்கள் எங்கே என்பது குறித்து தகவல் தெரிவிக்குமாறு ஆப்கன் நிர்வாகத்திடம் கோரியது.
செய்தியாளர்களை தாங்கள் சிறை வைக்கவில்லை என்று கூறிய ஆப்கன் நிர்வாகம் அவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்று அவர்கள் பணிபுரிந்த ஊடகத் தலைவர் தெரிவித்தார்.
எல்லையில் பதற்ற நிலைக்கு காரணம் சீனா: வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு
எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதற்கு சீனா தான் காரணம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ‘குவாட்’ என்னும் 4 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் அவருடன் ஆண்டனி பிளிங்கன் (அமெரிக்கா), யோஷிமாசா ஹயாஷி (ஜப்பான்), மரிஸ் பெயின் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் மரிஸ் பெயினுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அவருடன் கூட்டாக நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-
இந்திய சீன உறவுகள் குறித்து விவாதித்தோம். ஏனெனில் இது எங்கள் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதின் அங்கம் ஆகும். மேலும் இது நிறைய நாடுகள், குறிப்பாக ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகள் சட்டப்பூர்வ ஆர்வமாக இருக்கும் ஒரு விவகாரம்.
அசல் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளை குவிக்க வேண்டாம் என்று இந்தியாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததால்தான் தற்போதைய நிலைமை எழுந்துள்ளது.
எனவே ஒரு பெரிய நாடு எழுதிய உறுதிமொழிகளை புறக்கணிக்கிறபோது அது முழு சர்வதேச சமூகத்துக்கும் நியாயமான அக்கறையான பிரச்சனை ஆகிறது என்று அவர் தெரிவித்தார்.
கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் 2020 ஜூன் 15-ந் தேதி இந்திய படைகள் மீது சீனா தாக்குதல் தொடுத்ததும், இந்தியா பதிலடி கொடுத்ததும் இந்த மோதலில் இரு தரப்பிலும் பெருத்த உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது அங்கு ஒரு பக்கம் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு பக்கம் இரு தரப்பு ராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. இருப்பினும் பதற்றம் தொடர்கிறது.
கொரோனா விதிமீறல் விவகாரம்: இங்கிலாந்து பிரதமருக்கு நோட்டீஸ்
கொரோனா விதிமீறல் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சமயத்தில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்ட விவகாரம் அந்த நாட்டின் அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக லண்டன் போலீசார் அண்மையில் விசாரணையை தொடங்கினர்.
இந்த சம்பவங்களுக்காக பிரதமர் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். ஆனாலும் இந்த விவாகரத்தில் பிரதமர் தனது பதவிவை விட்டு விலக வேண்டும் என அவரது சொந்த கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா விதிமுறையை மீறிய விவகாரத்தில் போரிஸ் ஜான்சனிடம் விசாரணை நடத்துவதற்காக லண்டன் போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அந்த நோட்டீசில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகள் குறித்த முழுமையான விவரங்களை உண்மையாக வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பிரபல பாடகர் உள்பட 4 பேர் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட மோதலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் ஒருவர் பிரபல பாடகர் கோடக் பிளாக் என்று அந்நாட்டு செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல பாடகர் ஜஸ்டின் பைபரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. அதைக் கொண்டாடும் வகையில் நைஸ் கை உணவுவிடுதிக்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது ஏற்பட்ட மோதலில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கோடக் பிளாக் உள்பட 4 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.