scorecardresearch

கொரோனா கட்டுப்பாடுகள்: வலுக்கும் போராட்டம்… ரஷிய அதிபருடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு… மேலும் முக்கியமான உலக நிகழ்வுகள்

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இந்த நிலையில், சீனாவின் பெய்ஸ் நகரில் ஒமைக்ரான் தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருவதால் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

ரஷிய  அதிபருடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு

உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் நேரில் சந்தித்து பேசினார்.

சோவியத் யூனியன் உடைந்த பிறகு ரஷியா வசம் இருந்த உக்ரைன் தனி நாடாக பிரிந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்ப பகுதி ரஷியாவுடன் இணைந்தது. அதன் பிறகு இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படத் தொடங்கியது.

ரஷியா பெரியதொரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது. அதைத் தொடர்ந்து பரம எதிரியான ரஷியா சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தது.

உக்ரைனில் எல்லையில் ரஷியா தனது படைகளை அதிக எண்ணிக்கையில் நிறுத்தியுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், அதை தொடர்ந்து மறுத்துவரும் ரஷியா, உக்ரைனில் தாக்குதல் நடத்தும் திட்டம் இல்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார்.

சுமார் 5 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அதிபர் புதின் கூறியதாவது:

நாங்கள் சமரசத்திற்கு தயாராக இருக்கிறோம். பிரான்ஸ் அதிபரின் முன்மொழிவை பரிசீலிக்கிறேன்.

உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததற்கு நன்றி. ஆனால், மேற்கத்திய நாடுகள் தான் தொடர்ந்து உக்ரைன் விவாகரத்தை பெரிதுப்படுத்தி வருகின்றன என்றார் புதின்.

அமெரிக்க அதிபர் எச்சரிக்கை:இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தும்பட்சத்தில் ரஷியாவிலிருந்து ஜெர்மனிக்கு பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு செல்லும் ‘நார்டு ஸ்ட்ரீம் 2’ எனும் எரிவாயு குழாய் துண்டிக்கப்படும் என்று எச்சரித்தார்.

கெரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு:

நியூசிலாந்திலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூஸிலாந்து நாட்டிலும் லாரி ஓட்டுநர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கனடாவில் எல்லை கடந்து பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்த நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில்  லாரிகளுடன் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் வெலிங்டனில் லாரிகள் மற்றும் கார்களில் அணிவகுத்துச் சென்று  நாடாளுமன்றம் அமைந்துள்ள வீதியை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வெலிங்டன் நகரில் பதற்றம் நீடிக்கிறது. இதேபோல் தெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் ஒரு வாரத்துக்கும் மேலாக நடந்து வரும் லாரி டிரைவர்களின் போராட்டத்தால் ஒட்டாவா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. கனடாவில் லாரி டிரைவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த போராட்டம் உலகின் பிற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கமலா ஹாரிசின் கணவர் பங்கேற்ற

நிகழ்ச்சியில் வெடி குண்டு புரளி

அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசின் கணவர் டெளக் எம்ஹாஃப், வாஷிங்டனில் உள்ள டர்பார் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார்.

அந்தப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக சீக்ரட் சர்வீஸ் ஏஜெண்ட்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, டெளக் எம்ஹாஃபை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றினர்.

பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

அதன் பிறகு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் அங்கே இல்லை என்பது தெரியவந்தது.

எனினும், சீக்ரட் சர்வீஸுக்கு வந்த தொலைபேசி அழைப்பின் உரையாடல் பதிவை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

சீனாவின் இந்த நகரில் அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு

சீனாவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பெய்ஸ் நகரில் கடந்த வாரம் முதல் ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியிருப்பது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் இருந்துதான் கொரோனா உலகமெங்கும் பரவியது. அதன் கோரத் தாண்டவம் இன்னமும் ஓய்ந்த பாடில்லை.

மிக அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா இருக்கிறது. இந்த நிலையில், சீனாவின் பெய்ஸ் நகரில் ஒமைக்ரான் தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருவதால் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வேறு எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளையும் மூடவும், சாலைகளில் வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருவதன் காரணமாக சீனா வைரஸ் பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

சூரிய ஒளிவட்டத்தில் பெருவெடிப்பு இன்று பூமியை தாக்கும்: ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு

சூரிய வெடிப்புகள் இன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றும் மற்றும் நாளையும் புதிய சூரிய வெடிப்பால் பூமி தாக்கப்பட உள்ளது, இது புவி காந்த புயலை தூண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமியை நோக்கி சூரியனால் தாக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிப்புகளால் இதேபோன்ற மிதமான புவி காந்த புயல் தூண்டப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இது வருகிறது.

SOHO என்பது சூரியனை ஆய்வு செய்வதற்காக 1995 இல் தொடங்கப்பட்ட நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூட்டுப் அமைப்பு இதை கண்டறிந்ததாக விண்வெளி அறிவியலில் சிறந்து விளங்கும் மையம் (CESS) வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

சூரிய ஒளிவட்டத்தில் நிகழும் பெருவெடிப்பு (CME) என்றால் என்ன?

இது சூரியனின் கரோனாவிலிருந்து பிளாஸ்மா மற்றும் காந்தப்புலத்தின் பெரிய வெளியேற்றம் ஆகும். CMEகள் சூரியனிலிருந்து வெளிப்புறமாக வினாடிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் (கிமீ/வி) வேகத்தில் 3000 கிமீ/வி வேகத்தில் பயணிக்கின்றன. பூமியை இயக்கும் வேகமான CMEகள் 15-18 மணிநேரத்தில் நமது கிரகத்தை அடைய முடியும். மெதுவான CMEகள் வருவதற்கு பல நாட்கள் ஆகலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Worldnews top five over night france president meets putin408653

Best of Express