எந்திரன், 2.0 என ரோபோவை சினிமாவில் மட்டும் ரசிக்காமல், நடைமுறை வாழ்க்கையிலும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது இந்த டெக்னாலஜி தலைமுறை.
வணிக வளாகங்கள், ரெஸ்டாரண்டுகள், தனிச் செயலளர் என ரோபோக்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
2.0 திரைப்படத்தில் வரும் ஏமி ஜாக்ஸனிடம் கொஞ்சம் பேச்சு கொடுக்கலாம், என கல்லூரி மாணவர்கள் நினைக்கையில், அவர் ரோபோ என்ற உண்மை தெரிந்து மனம் வெதும்பிப் போவார்கள்.
அந்த மாதிரி இந்த செய்தி வாசிப்பாளரின் அழகையும், உச்சரிப்பையும் பார்த்து நீங்கள் மெய்மறந்துப் போனால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. காரணம் அவர் பெண்ணே இல்லை. அப்படியென்றால்?
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான, ’சின்குவா’ செய்தி சேனலில் பெண் உருவத்தில் ரோபோ ஒன்றை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த ரோபோ பீஜிங்கில் பார்லிமெண்ட், கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கும் தலைவர்கள் குறித்த செய்திகளை வாசித்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, மனிதர்களை போல முக பாவனைகள் மற்றும் செயல்களை அப்படியே செய்யும் திறன் கொண்டது.
‘சின் சியாங்மெங்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, சிறிய காதணிகள், தலைமுடி, வெளிர் பிங்க் உடை ஆகியவை அணிந்து அசல் பெண்ணைப் போலவே காட்சியளிக்கிறது.
சின்குவா சேனலின் செய்தி வாசிப்பாளர் கியூ மங் உருவத்தினை மாதிரியாக வைத்து, இந்த சின் சியாங்மெங் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை சொகோவு எனும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து சின்குவா சேனலே உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே 2 ஆண் ரோபோக்களை செய்தி வாசிப்பாளர்களாக சீனாவின் உசேன் பகுதில் உள்ள சேனல் ஒன்று பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் ’சின் சியாங்மெங்’ ரோபோ தான் உலகின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளது!