சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், அதன் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. அம்பானி வீட்டு திருமணத்தில் அரசியல்வாதிகள், பாப் நட்சத்திரங்கள் மற்றும் பல பில்லியனர் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் அம்பானி வீட்டு ஆடம்பரத் திருமணத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்காக முகேஷ் அம்பானி சுமார் 3,000 கோடி ரூபாய் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், செல்வத்தைப் பொறுத்தவரை, அம்பானி, அதானி மற்றும் டாடா கூட இந்த நபரின் குடும்பத்துடன் ஒப்பிடும்போது அவர்களின் செல்வம் குறைவுதான்.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 8 தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கும் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றானவர். அம்பானி மற்றும் அதானி போன்ற குடும்பங்களின் கூட்டுச் சொத்து அவரது குடும்பத்துடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவுதான்.
ஷேக் காலித் யார்?
ஷேக் காலித் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகன் மற்றும் அபுதாபியின் ஆளும் அல் நஹ்யான் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் 2016-ல் தேசிய பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், 2023-ல், அவர் அபுதாபி நிர்வாகக் குழுவின் தலைவராகவும், அபுதாபியின் பட்டத்து இளவரசராகவும் நியமிக்கப்பட்டார்.
உலகின் பணக்கார குடும்பம்
அல் நஹ்யான் குடும்பம் 50 உறுப்பினர்களைக் கொண்ட உலகின் பணக்கார குடும்பமாக கருதப்படுகிறது. 2023 ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, குடும்பத்தின் மொத்தச் சொத்து மதிப்பு 305 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ((சுமார் ரூ. 26 டிரில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, குடும்பத்தின் சொத்து முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் மொத்தச் செல்வத்தை விஞ்சியுள்ளது.
முகேஷ் அம்பானி 111 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், கௌதம் அதானிக்கு 99.6 பில்லியன் டாலர் சொத்தும் உள்ளது. உலகப் பணக்காரர்களின் செல்வம் கூட அல் நஹ்யான் குடும்பத்துடன் பொருந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பு 237 பில்லியன் டாலர்கள் ஆகும்.
அறிக்கையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தலைமையில், இந்த குடும்பம் உலகின் எண்ணெய் இருப்புகளில் 6 சதவீதத்தை கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், ரிஹானாவின் சாவேஜ் எக்ஸ் ஃபென்டி முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் வரை பல உலகளாவிய நிறுவனங்களில் குடும்பம் முதலீடு செய்துள்ளது. குடும்பம் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப்பைக் கொண்டுள்ளது மற்றும் முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் பங்குகளை வைத்திருக்கிறது.
700 கார்களை வைத்திருக்கும் அரச குடும்பம்
அல் நஹ்யான் குடும்பம் 700 க்கும் மேற்பட்ட கார்களை வைத்திருக்கிறது, இதில் உலகின் மிகப்பெரிய SUVகள் மற்றும் ஜீப்கள் சில உள்ளன. ஜனாதிபதியின் சகோதரர் ஷேக் மன்சூர் பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானிடம் ஐந்து புகாட்டி வேரான்கள், ஒரு ஃபெராரி 599XX, ஒரு மெக்லாரன் MC12, ஒரு Mercedes-Benz CLK GTR மற்றும் லம்போர்கினி ரெவென்டன் போன்ற சொகுசு வாகனங்கள் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“