ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது, இரு வேறு சம்பவங்களில் பெண்களிடம் தவறான நடந்துகொண்டதன் பேரில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து இந்திய யோகா குரு ஆனந்த் கிரி, ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் ஹனுமார் கோவிலில், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் யோகா குரு ஆனந்த் கிரி. இவருக்கு சர்வதேச நாடுகளிலும் பக்தர்கள் இருந்ததால், அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார்.
2016 மற்றும் 2018ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இருவேறு சம்பவங்களில் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, 6 வாரகால பயணமாக, ஆனந்த் கிரி, ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார். வரும் திங்கட்கிழமை அவர் இந்தியா திரும்ப இருந்தநிலையில், பெண்கள் அளித்த புகார்களின் பேளில், சிட்னி போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அவரை ஜூன் மாதம் 26ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிட்னி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
யோகா குரு ஆனந்த் கிரியின் பிரத்யேக இணையதளத்தில், 'மற்றவர்களுக்கு சேவை செய்வதே எங்களது அமைப்பின் நோக்கம். நான் சாமியார் இல்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த இணையதளம் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் கிரி, தனது பேஸ்புக் பக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷா,மத்திய அமைச்சர் வி.கே.சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
-குமரன் பாபு