இனிப்புகளை அதிகமாக உண்பதும், மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் மட்டுமே ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் காரணிகள் அல்ல. "பல தினசரி காரணிகள், நாம் கவனிக்காத நிலையில், ரத்த குளுக்கோஸ் அளவை அமைதியாக அதிகரிக்கக்கூடும்," என்று மும்பை வோக்கார்ட் மருத்துவமனையின் ஆலோசகர் நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் பிரணவ் கோடி தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
சர்க்கரை நோயாளிகள், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவோர், இந்த அறியப்படாத காரணிகள் குறித்து அறிந்து, சரியான முடிவுகளை எடுக்க உதவும் வகையில், டாக்டர் பிரணவ் சில ஆச்சரியமான காரணங்களையும், அவற்றை நிர்வகிப்பதற்கான எளிய வழிகளையும் பகிர்ந்துள்ளார்.
ரத்த சர்க்கரையை உயர்த்தும் 10 காரணங்கள்:
-
தூக்கமின்மை: போதுமான தூக்கமின்மை, உடலின் இன்சுலின் உணர்திறனைக் குறைத்து, மன அழுத்த ஹார்மோன்களை (கார்டிசால்) அதிகரிக்கிறது. இது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். தினமும் 7-8 மணிநேரம் ஆழ்ந்த உறக்கம் பெற முயற்சி செய்யுங்கள். படுக்கைக்கு செல்வதற்கு முன் திரை நேரத்தைக் குறைத்து, தூக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குங்கள்.
-
மன அழுத்தம்: மன அழுத்தம் அதிகரிக்கும்போது, உடல் கார்டிசால் மற்றும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்களை வெளியிடுகிறது. இவை இரத்தத்தில் குளுக்கோஸை வெளியிடுவதன் மூலம் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. 10 நிமிடம் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி அல்லது உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கவும்.
-
நீரிழப்பு (Dehydration): உடலில் நீர்ச்சத்து குறையும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் செறிவை அதிகரிக்கிறது. சிறுநீரகம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்ற முடியாமல் போகலாம். நாள் முழுவதும் போதுமான தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போதும், வெப்பமான காலநிலையிலும் இதை உறுதிப்படுத்தவும்.
-
சில மருந்துகள்: ஸ்டீராய்டுகள் (Corticosteroids), சில டையூரெடிக்ஸ் (Diuretics), பீட்டா-பிளாக்கர்கள் (Beta-blockers) மற்றும் சில கருத்தடை மாத்திரைகள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். உங்கள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, அவை ரத்த சர்க்கரை அளவை பாதிக்கலாம் என்பதை அறிந்து, தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மாற்று மருந்துகளைப் பரிசீலிக்கவும்
-
உணவு வேளைகளைத் தவிர்ப்பது: காலை உணவைத் தவிர்ப்பது பகலில் இன்சுலின் எதிர்ப்பை அதிகரிக்கச் செய்து, அடுத்த வேளை உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக உயர்த்தலாம். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான காலை உணவை தவறாமல் உண்ணுங்கள்.
-
செயற்கை இனிப்பூட்டிகள்: சில ஆய்வுகள், செயற்கை இனிப்பூட்டிகள் நேரடியாக சர்க்கரையை உயர்த்தாவிட்டாலும், அவை குடல் பாக்டீரியா சமநிலையை மாற்றி, காலப்போக்கில் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை பாதிக்கலாம் என்று கூறுகின்றன. செயற்கை இனிப்பூட்டிகளைத் தவிர்த்து, இயற்கை இனிப்புகளான ஸ்டீவியா அல்லது குறைந்த அளவில் தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம் அல்லது இனிப்புக்கு மாற்றாக பழங்களைச் சேர்க்கலாம்.
-
பேக்கேஜ் உணவுகள்: ஆரோக்கியமானது என விளம்பரப்படுத்தப்படும் கிரனோலா பார்கள் (அ) சாலட் டிரஸ்ஸிங் போன்ற உணவுகளிலும் எதிர்பாராத சர்க்கரை இருக்கலாம். உணவு லேபிள்களை எப்போதும் கவனமாகப் படித்து சாப்பிடவும்.
-
நோய் அல்லது தொற்றுகள்: லேசான காய்ச்சல் முதல் சிறுநீர் பாதை தொற்று வரை, உங்கள் உடல் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிட்டு ரத்த சர்க்கரையை உயர்த்தும். உடல்நிலை சரியில்லாதபோது உங்கள் ரத்த சர்க்கரை அளவை இன்னும் உன்னிப்பாகக் கண்காணிக்கவும்.
-
ஹார்மோன் மாற்றங்கள்: பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்பம் அல்லது மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) போன்ற காலங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். மாற்றங்களை கண்காணித்து, தேவைப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் பேசவும்.
-
அதிக உடற்பயிற்சி (Over-exercising): மிதமான உடற்பயிற்சிகள் சர்க்கரையை குறைக்கும். ஆனால், மிகக் கடுமையான அல்லது திடீர் உடற்பயிற்சிகள் தற்காலிகமாக ரத்த சர்க்கரை அளவை உயர்த்தலாம். ஏனெனில் உடல் கூடுதல் ஆற்றலுக்காக குளுக்கோஸை வெளியிடுகிறது. உடற்பயிற்சி செய்வதற்கு முன் மற்றும் பின் இரத்த சர்க்கரை அளவை சரிபார்க்கவும். உங்கள் உடற்பயிற்சி முறைகளை மருத்துவருடன் கலந்தாலோசித்து திட்டமிடுங்கள்.
மேலே குறிப்பிடப்பட்ட, பொதுவாக நாம் கவனிக்காத காரணிகளைப் புரிந்துகொள்வது, உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உங்களுக்கு அதிக அதிகாரத்தை அளிக்கும். "போதுமான நீர் அருந்துதல், மன அழுத்தத்தைக் கையாளுதல், சமச்சீர் உணவு உட்கொள்ளுதல் மற்றும் உங்கள் உடலின் பிரதிபலிப்புகளைக் கண்காணித்தல் போன்ற எளிய வாழ்க்கை முறைப் பழக்கங்கள், எதிர்பாராத சவால்கள் வரும் போதும் உங்கள் சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க நீண்ட தூரம் உதவும்" என்று டாக்டர் பிரணவ் கோடி தெரிவித்துள்ளார்.