ரத்த அழுத்தம் (Hypertension) பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமல் இருந்தாலும், சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இதை கண்டறிவதற்கு ரத்த அழுத்தத்தை சீராக கண்காணிப்பது மிகவும் முக்கியம். சில சமயங்களில் உங்கள் ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனால், அதை எப்படி சரியாக செய்வது என்பதில் பலருக்கும் விழிப்புணர்வு இல்லை.
ஆங்கிலத்தில் படிக்க:
"ரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது எளிதாகத் தோன்றினாலும், அதைச் சரியான முறையில் செய்வது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தவறான தோரணையில் உட்காருவது அல்லது சிறுநீர் பையை முழுமையாக வைத்திருப்பது போன்ற சிறிய விஷயங்கள் கூட அளவீட்டை மாற்றும் என்பதை பலர் உணருவதில்லை," என்கிறார் மும்பையில் உள்ள சர் ஹெச். என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிபீன்சந்திர பாம்ரே.
வீட்டில் ரத்த அழுத்தத்தை சரியாக அளவிடுவது எப்படி என்பதற்கான விரிவான வழிகாட்டி இங்கே:
1.முதலில், ரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கு முன் சிறுநீர் பையை காலி செய்யவும்.
2.ஐந்து நிமிடங்கள் அமைதியாக உட்காரவும்.
3.முதுகுக்கு ஆதரவு உள்ள நாற்காலியில், கால்களை தரையில் தட்டையாக வைத்து உட்காரவும்.
4.கால்களை குறுக்காக போட்டுக்கொள்ளக் கூடாது.
5.உங்கள் கையை இதய மட்டத்தில், ஒரு மேசை அல்லது தலையணையின் மீது வைத்து தாங்கவும்.
6.ரத்த அழுத்த கஃப் (Cuff) சரியான அளவில் இருப்பதையும், உங்கள் வெறும் கையில் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்யவும்.
7.பதற்றம் அடைய வேண்டாம், நிதானமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
8.அளவீடு எடுப்பதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் பேசவோ, காபி குடிக்கவோ அல்லது புகைபிடிக்கவோ கூடாது.
9.ஒரு நிமிட இடைவெளியில் இரண்டு முறை அளவீடு எடுத்து, இரண்டின் சராசரியைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் அளவிடுவது உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கண்காணிக்க உதவும், என்கிறார் டாக்டர் பாம்ரே.
10.இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்.
இந்த ரத்த அழுத்த அளவீடுகளை தவறாமல் தெரிந்து கொள்வது, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்கவும், உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் மன அழுத்த மேலாண்மை உட்பட தங்கள் வாழ்க்கை முறை தேர்வுகளில் கவனம் செலுத்தவும் தனிநபர்களை ஊக்குவிக்கும் என்று டாக்டர் பாம்ரே வலியுறுத்தினார். "எனவே, அடுத்த முறை உங்கள் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க விரும்பினால், துல்லியமான அளவீடுகளைப் பெற இந்த முக்கியமான குறிப்புகளைப் பின்பற்றுங்கள்," என்று டாக்டர் பாம்ரே கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரை பொதுவெளியில் உள்ள தகவல்கள் மற்றும்/அல்லது நாங்கள் பேசிய நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. எந்தவொரு வழக்கத்தையும் தொடங்கும் முன் எப்போதும் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.