விட்டனேரியைச் சேர்ந்த தினேஷ் சேதுபதி, பிரபாகர் ஆகியோர் அப்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று கிடப்பதாக சிவகங்கை தொல்நடைக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அத்தகவலின் படி சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர், புலவர் கா.காளிராசா, செயலர், இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் க. சரவணன் ஆகியோர் அவ்விடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்டைக்குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, விட்டனேரி ஊரிலிருந்து பின் பகுதியில் பெரிய கிளுவச்சி செல்லும் காட்டுப் பாதையில் இடத்தை சுத்தம் செய்யும்பொழுது இக் கல்வெட்டு கிடைத்துள்ளது, இக்கல்வெட்டை வாசித்த பொழுது இது அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு என தெரியவந்தது.
ஆசிரியம் கல்வெட்டு
ஆச்ரயம் என்ற வடசொல் கல்வெட்டுகளில் ஆசிரியம் என்று குறிப்பிடப்படுகிறது, ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு மற்றும் ஆதரவை குறிக்கும். பொதுவாக அப்பகுதியை ஆள்பவர்கள் பாடிக் காவல் ஏற்படுத்தி ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட தான தர்மத்தை காத்தல், மற்றும் ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இவ்வகை ஆச்சரியம் கல்வெட்டு தெரிவிக்கிறது.இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் இரண்டு பக்கங்களில் கல்வெட்டுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. இது 13ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது, ஒரு பக்கத்தில் 12 வரிகளும் மற்றொரு பக்கத்தில் ஒன்பது வரிகளும் இடம்பெற்றுள்ளன.இக்கல்வெட்டு மூன்றடி உயரத்திலும் ஒன்றேகால் அடி அகலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
கல்வெட்டுப் படி.
முதல் பக்கம்.
ஸ்வஸ்தி ஸ்ரீ
இவ்வூர் கீழ்
மங்கல நா
ட்டு வழிதி
வாழ்மங்கல
மான வாளவ
மாணிக்கத்து
நிலையத்தி(லு)
ண்டற்கும்
பிள்ளைகளு
க்கும் ஆசிரி
யம்
இரண்டாம் பக்கம்.
மேலைக்
கோட்டை
யானகலங்
காத கண்ட
ரான அஞ்
சினார் புகலி
டங் காத்தா
ற்கு இவ்வூர்
ஆசிரியம்.
கல்வெட்டுச் செய்தி
ஸ்வஸ்தி ஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டில் இவ்வூரானது கீழ் மங்கல நாட்டு வழுதிவாழ் மங்கலமான என்று குறிப்பிடப்படுகிறது. மேலும் வாளவ மாணிக்கத்து என்பது இப்பகுதியின் ஆட்சியாளரான மாளவ சக்கரவர்த்திகளை குறிக்கிறது. நிலையத்தில் இருப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஆசிரியம் என்று ஒரு பக்கத்தில் முடிகிறது. மற்றொரு பக்கத்தில் மேலைக் கோட்டையான கலங்காத கண்டரான அஞ்சினார் புகலிடம் காத்தாற்கு இவ்வூர் ஆசிரியம் என்றும் வருகிறது.
ஆசிரியம். அஞ்சினார் புகலிடம்
அவையதானம் அல்லது அடைக்கல தானம் பல்வேறு காரணங்களால் தம்மை காக்க வேண்டி வருபவர்களுக்கு அவர்களை ஏற்று வேண்டியதை செய்து கொடுத்து பாதுகாப்பதாகும், இதற்கென தனியாக குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன, இவை பெரும்பாலும் சமணக் கோவில்களுக்கு அருகில் இருந்தன, இந்த இடங்கள் அஞ்சினார் புகலிடம் என்று வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இவை பின்னர் வணிகர்கள் தங்களது வணிகத்தின் போது பாதுகாப்பாக தங்குமிடமாக ஆட்சியாளர்களால் மாற்றம் பெற்றுள்ளது. அவ்வாறாக இவ்விடமும் வணிகர்களுக்கு அஞ்சினார் புகழிடமாக வழங்கப்பட்ட இடமாகவே கருதலாம்.
மாளவச் சக்கரவர்த்திகள்
வாளவர் மாணிக்கத்து என்பது மாளவர் மாணிக்கம் மாளவ சக்கரவர்த்திகளை குறிக்கிறது, இவர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய பாண்டியர் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்தனர். இவர்கள் ஊரார்க்கும் நாட்டார்க்கும் நிர்வாகம் தொடர்பான அரசு ஆணைகளை நிறைவேற்றி வந்திருக்கிறார்கள்.
மங்கல நாடு
இக் கல்வெட்டில் குறிக்கப்படும் மங்கள நாடு என்பது கீழ் மங்கல நாடு மேல் மங்கல நாடு என இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தது. இது திருக்கானப் பேர் கூற்றத்தில் அமைந்திருந்தது. இவை இன்றைய காளையார் கோவில் சிவகங்கை வட்டங்களை உள்ளடக்கியதாகும்.
வழுதிவாழ் மங்கலம்
கல்வெட்டில் குறிப்பிடப்படும் வழுதிவாழ் மங்கலம் என்பது இப்பகுதியாக இருக்கலாம். வழுதி வாள் மங்கலம் முனைப் பாண்டிய நாட்டு திருக்கானப்பேர் கூற்றத்தில் அமைந்திருந்ததை பத்தாம் நூற்றாண்டு பராந்தகச் சோழன் ஆட்சியில் பரகேசரி மூவேந்த வேளான் கல்வெட்டில் இடம்பெற்று இருந்ததை இந்தியத் தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. ஆசிரியம் கல்வெட்டு இதுவரை தமிழகப் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் புதுக்கோட்டைப் பகுதியில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சிவகங்கை பகுதியில் முடிகண்டம் மற்றும் சக்கந்தியில் இவ்வகை கல்வெட்டுகள் முன்னே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்வெட்டின் முதன்மை கருதி கல்வெட்டை சிவகங்கை அரசு அருங்காட்சியத்தில் சிவகங்கை தொல்நடைக் குழு ஒப்படைக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.