தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை, உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் பல்வேறு வகைகளில் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் அடுத்த தீத்திபாளையம் பகுதியில் உள்ள சி.எம்.சி இன்டர்நேஷனல் பள்ளி மைதானத்தில், ஃபைட்டர்ஸ் அகாடமி மற்றும் ஹையாசிகா கராத்தே அமைப்பு இணைந்து நடத்திய சிலம்பம் மற்றும் கராத்தே சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிலம்பம் சுற்றும் சாதனை நிகழ்ச்சியில், 4 வயது சிறுவர்கள் முதல் 50 வயது நபர்கள் வரை என சுமார் 1,500 பேர் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 45 நிமிடங்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய உடை அணிந்து 1,500 பேர் சிலம்பம் சுற்றியது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
மேலும் இந்த உலக சாதனை போட்டிக்காக தமிழ்நாட்டில் இருந்து சென்னை, கோவை, கன்னியாகுமரி, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த சிலம்பக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் சிலம்பம் சுற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
உலகில் வேறு எந்த பகுதியிலும் இந்த சாதனை நிகழ்த்தியதில்லை என்பதால் இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் தலைமுறையினருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்துவதை ஊக்குவிக்கவும், செல்போன், இணையதளம் மற்றும் போதை பொருட்கள் பக்கம் செல்லாமல் இருக்கவும், இளைஞர்கள் உடல் நலம் மற்றும் மனநிலையை மேம்படுத்த விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனை அனைத்து இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லவே இந்த சாதனை முயற்சி செய்யப்பட்டது என ஃபைட்டர்ஸ் அகாடமி நிறுவன தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார். பைட்டர்ஸ் அகாடமி நிறுவனத் தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஒரு ரூபாய் இட்லி பாட்டி, உலக சிலம்பம் சங்கத் தலைவர் எஸ்.சுதாகர், செயலாளர் கீதா மதுமோகன் மற்றும் சி.எம்.சி பள்ளி தாளாளர் ஐ.நாதன், தலைவர் லீமா ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான்.