குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் இருக்குமென்றால் அது நிச்சயம் சுற்றுலாவாக இருக்கும். சுற்றுலா என்பது விடுமுறையை மட்டும் கழிப்பதற்கான ஒரு சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், மனிதர்கள் தங்களை தாங்களே புதிப்பித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.
தற்போது பள்ளி குழந்தைகள் முதல் பலருக்கும் கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குடும்பமாகவும், நண்பர்களுடனும் மற்றும் தனியாகவும் சுற்றுலா செல்ல பலர் திட்டமிட்டிருப்பார்கள். அதனடிப்படையில், இந்தியாவிற்குள் சுற்றுலா செல்ல விருப்பப்படுபவர்களுக்காக சில அழகிய சுற்றுலா தலங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியலை காணலாம்.
டார்ஜீலிங், மேற்கு வங்கம்:
மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ள டார்ஜீலிங் பலருக்கு விருப்பத் தேர்வாக அமைகிறது. தேயிலை தோட்டங்களுக்கு பெயர் போன இந்த இடம், மலைமுகடுகளால் நிரம்பி உள்ளது. இந்த இடத்தில் ரயில் பயணம் செய்வதற்கு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். கோடை காலத்தை இனிமையாக கழிக்க விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் சரியான இடமாக அமையும்.
ஊட்டி, தமிழ்நாடு:
இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் மலைகளின் அரசியாக விளங்கும் ஊட்டி இடம்பெறுகிறது. கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ள இந்தப் பகுதி, பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். ஊட்டியின் கால நிலையை அதிகப்படியான மக்கள் விரும்புகின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்:
கடற்கரை மற்றும் நீர்நிலைகள் நிரம்பிய பகுதிக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் சரியான தேர்வாக இருக்கும். குறிப்பாக, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட இங்கு வாய்ப்பு அதிகம்.
மணாலி, ஹிமாச்சல் பிரதேசம்:
மலைப்பாங்கான இடத்தை விரும்புபவர்களுக்கு ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி நிச்சயம் பிடிக்கும். ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள், உயரமான சிகரங்கள், குளிர்ச்சியான கால நிலை என சம்மர் உஷ்ணத்தை தணிப்பதற்கு சரியான இடமாக மணாலி அமையும்.
கோவா:
நண்பர்களுடன் சுற்றுலா செல்பவர்களுக்கு எப்போதுமே முதன்மையான தேர்வாக கோவா இருக்கும். அருமையான கடல் உணவுகள், இனிமையான கடற்கரைகள், நீர்நிலை விளையாட்டுகள் என இளம் பருவத்தினர் விரும்பும் அனைத்தும் கோவாவில் ஒன்றாக அமைந்துள்ளது.