சிங்கம்புணரியில் 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தை தனது தாடி முடியில் கட்டி 510 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் இழுத்து உலக சாதனை படைக்கும் முயற்சி நடைபெற்றது. தாடை முடியில் கட்டி இழுத்த 60 வயது இளைஞரின் சாகசத்தை கண்டு பொது மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
சோழன் உலக சாதனை முயற்சிக்காக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதான இளைஞர் செல்லையா திருச்செல்வம். இவருடைய தாடையில் உள்ள முடியில் (தாடியில்) கயிற்றை கட்டி அந்த கயிற்றை 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தில் கட்டப்பட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கிருங்காக்கோட்டை விலக்கு சாலையில் இருந்து தாடியினால் டாடா ஏஸ் வாகனத்தை இழுத்து தனது 5 வது உலக சாதனை முயற்சி சாகசத்தை துவங்கினார்.
அங்கிருந்து டாடா ஏஸ் வாகனத்தை காரைக்குடி சாலை வழியாக 510 மீட்டர் தூரத்தை 15 நிமிடத்தில் இழுத்து பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். 60 வயதான இளைஞரின் இந்த சாகசத்தை கண்டு பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். சாலையில் செல்பவர்கள் இதனை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
தொடர்ந்து 60 வயது இளைஞரின் இந்த சாதனையை போற்றி சோழன் உலக சாதனை சான்றிதழ் பதக்கம் நினைவு கேடயம் அடையாள அட்டை போன்றவை வழங்கி கௌரவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“