ரொம்ப சீப்பா எது கிடைத்தாலும் அதன்மேல் நமக்கு பெரும் மதிப்பு ஏற்படாது புறந்தள்ளிவிடுவோம். அப்படி நாம் பெரும்பாலும் புறந்தள்ளும் ஒன்று கொய்யா பழம். ஆனால், அதில் அத்தனை மருத்துவ குணங்கள் உண்டு. அதில், முக்கியமான 7 மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
1. கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்தும்:
கருவுறுதலுக்கு இன்றியமையாத ஃபோலேட் சத்து கொய்யா பழத்தில் உள்ளது. மேலும், கருப்பையில் நீர்க்கட்டிகள் இருக்கும் பெண்கள் கொய்யா பழத்தை உண்பது நல்லது என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. கருவுறுதலுக்கு மட்டுமல்லாமல், கருவுற்ற பெண்களும் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் கரு நல்ல வளர்ச்சியை அடையும்.
2. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது:
கொய்யா பழத்தில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், நமது உடலிலுள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் சத்தை சம அளவில் வைத்திருக்க கொய்யா பழம் துணை புரிகிறது. இதனால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். மேலும், உடலில் உள்ள தீய கொழுப்புகளை குறைப்பதால், இதய நோய்களையும் தடுக்க வல்லது.
3. புற்றுநோய் ஆபத்தை குறைக்கும்:
கொய்யா பழத்தில் வைட்டமின் சி, குவெர்செட்டின், லைக்கோபென், பாலிஃபினால் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இந்த ஆண்டி-ஆக்ஸிடெண்டுகளால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும். மேலும், புற்றுநோய் செல்கள் வளர்வதையும் கொய்யா பழம் தடுக்கிறது.
4. பார்வையை கூர்மையடைய செய்யும்:
வைட்டமின் ஏ சத்து கொய்யாவில் உள்ளதால் கண்பார்வையை கூர்மையாக்கும். கண்ணுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், பார்வைதிறனையும் அதிகரிக்கும்.
5. செரிமானத்தை அதிகரிக்கும்:
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை அதிகரிக்கும். ஒரேயொரு கொய்யா பழம் மட்டுமே, ஒருநாளைக்கு நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்தை தரவல்லது.
6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
வைட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், நோய்த்தொற்று, நோய்க்கிருமிகளிடமிருந்து உங்களை காக்க வல்லது.
7. நரம்புகள், தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்கும்:
மெக்னீசியம் சத்து நிறைந்திருப்பதால், தசைகளையும், நரம்புகளையும் ரிலாக்ஸாக வைத்திருக்கும்.