இயற்கையின் அதிசயங்களில் ஒன்று, சில விலங்குகள் தங்கள் நிறத்தை மாற்றும் வியத்தகு திறனைக் கொண்டுள்ளன. இந்த விலங்குகள் வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இரைக்குத் தெரியாமல் பதுங்கியிருக்கவும், இனப்பெருக்கத் துணையை ஈர்க்கவும், ஏன், தங்கள் உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் கூட இந்தத் திறனைப் பயன்படுத்துகின்றன. இது, அவை வாழும் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ள உதவும் ஓர் அற்புதமான வழிமுறையாகும். நிறத்தை மாற்றும் அற்புதமான திறன்கொண்ட 7 விலங்குகள் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. கிராப் ஸ்பைடர்கள் (Crab Spiders)
"மலர்ப் பூச்சிகள்" என்றழைக்கப்படும் கிராப் ஸ்பைடர்கள், தங்கள் நிறத்தை மாற்றும் சிலந்தி இனத்தைச் சேர்ந்தவை. WIRED பத்திரிகையின் கூற்றுப்படி, இவை பூக்களில் பதுங்கியிருந்து இரையைப் பிடிக்கும்போது, தாங்கள் இருக்கும் பூக்களின் நிறத்திற்கு ஏற்ப வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களுக்கு மாறுகின்றன. எனினும், இந்நிற மாற்றம் அவற்றின் வேட்டையாடும் திறனை அதிகரிப்பதில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றின் நிற மாற்றத்திற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2. சயனியா ஆக்டோபஸ் (Cyanea Octopus)
இந்த ஆக்டோபஸ் இனங்கள் நிறத்தை மாற்றும் திறனில் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவை குரோமடோஃபோர்ஸ் (chromatophores) எனப்படும் சிறப்பு வாய்ந்த தோல் செல்களைப் பயன்படுத்தி தங்கள் தோற்றத்தை மாற்றுகின்றன. எதிரிகளிடமிருந்து மறைந்து கொள்ளவும், தகவலுக்காகவும், வேட்டையாடுபவர்களிடமிருந்து விலகி இருக்கவும் இவை தங்கள் நிறத்தை மாற்றுகின்றன. நேஷனல் ஜியோகிராஃபிக் தகவலின்படி, இந்த நிற மாற்றங்கள் நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இது ஆக்டோபஸ்களை தங்கள் சுற்றுப்புறத்தில் தடையின்றி ஒன்றிணைக்க அனுமதிக்கிறது.
3. கட்லஃபிஷ் (Cuttlefish)
நேஷனல் ஜியோகிராஃபிக் தகவல்படி, கட்லஃபிஷ் தங்கள் உடலில் உள்ள குரோமடோஃபோர்ஸ் மூலம் மிக வேகமாக நிறத்தையும், தோலின் அமைப்பையும் மாற்றும் திறன் கொண்டவை. இது அவை தங்கள் சுற்றுப்புறங்களுடன் ஒன்றிணைந்து கொள்ளவும், மற்ற மீன்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. அவை தங்கள் சூழலின் நிறம், ஒளி வேறுபாடுகள் மற்றும் உணர்வுகளை நொடிப்பொழுதில் உணர்ந்து பிரதிபலிக்க முடியும். வெளிச்சம் இல்லாத போதும் கூட இந்தத் திறனை அவை வெளிப்படுத்துகின்றன. இந்த சிறப்பு வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும், இரையைப் பிடிக்கவும் கட்லஃபிஷ்களுக்கு உதவுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
4. பச்சோந்தி (Chameleon)
நம்பிக்கைக்கு மாறாக, பச்சோந்திகள் உருமறைப்புக்காக அல்லாமல், உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் (தெர்மோரெகுலேஷன்) மற்றும் தகவல் தொடர்புக்காகவுமே நிறத்தை மாற்றுகின்றன என்று WIRED குறிப்பிடுகிறது. அவை தங்கள் தோல் நிறமியை மாற்றுவதன் மூலம் வெப்பத்தை உறிஞ்சவோ அல்லது பிரதிபலிக்கவோ செய்கின்றன, இது வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், நிற மாற்றங்கள் மற்ற பச்சோந்திகளுக்கு செய்திகளைத் தெரிவிக்கின்றன. உதாரணமாக, ஆதிக்கம் அல்லது இனப்பெருக்கத்திற்குத் தயார் நிலை போன்றவற்றை இந்த நிற மாற்றங்கள் மூலம் அவை உணர்த்துகின்றன.
5. கோல்டன் டோர்ட்டாய்ஸ் பீட்டில் (Golden Tortoise Beetle)
கோல்டன் டோர்ட்டாய்ஸ் பீட்டில் அச்சுறுத்தப்படும்போது, அதன் நிறத்தை பிரகாசமான தங்க நிறத்தில் இருந்து மங்கலான பழுப்பு (அ) சிவப்பு நிறமாக மாற்றும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளது. அதன் இறக்கைகளின் உறைகளான எலிட்ராக்களுக்குள் திரவங்கள் நகர்வதால் இந்த மாற்றம் நிகழ்கிறது. ஒளி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பாதிக்கிறது. இந்த நிற மாற்றம் ஒரு பாதுகாப்பு உத்தியாக செயல்படலாம், சாத்தியமான வேட்டையாடுபவர்களை அதிர்ச்சியடையச் செய்யலாம் அல்லது தன்னை உண்ண முடியாது என்பதைக் குறிக்கலாம்.
6. பசிபிக் ட்ரீ ஃப்ராக் (Pacific Tree Frog)
பசிபிக் ட்ரீ ஃப்ராக் (பசிபிக் மரத் தவளை) அதன் தோல் நிறத்தை பச்சை நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாகவும், மீண்டும் பழுப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறமாகவும் பல மணிநேரம் அல்லது பல நாட்களில் மாற்றும் திறன் கொண்டது. Earth.com கூற்றுப்படி, இந்தத் திறன் அவற்றிற்கு பல்வேறு சூழல்களில் ஒன்றிணைந்து கொள்ளவும், உருமறைப்பு செய்யவும், வேட்டையாடுபவர்களிடமிருந்து விலகி இருக்கவும் உதவுகிறது. பின்னணி நிறம், பிரகாச நிலைகள் மற்றும் வெப்பநிலை போன்ற காரணிகள் இந்த நிற மாற்றத்தைப் பாதிக்கின்றன.
7. ஃபிளண்டர்கள் (Flounders)
ஃபிளண்டர்கள் கடலின் அடிப்பகுதியுடன் ஒன்றிணைந்து கொள்ள தங்கள் தோலின் நிறத்தையும் அமைப்பையும் மாற்றும் நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளன. இது அவற்றின் உருமறைப்புக்கு உதவுகிறது. குரோமடோஃபோர்ஸ் எனப்படும் தனித்துவமான தோல் செல்கள் மூலம் இதை அவை செய்கின்றன. இவை விரிவடைந்து (அ) சுருங்கி அவற்றின் நிறத்தை மாற்றும். இந்த தகவமைப்பு வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும், தங்கள் இரையை ஆச்சரியப்படுத்தவும் அவற்றிற்கு உதவுகிறது.