கோயம்புத்தூரில் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மாநில அளவிலான கிளஸ்டர் கால்பந்து விளையாட்டுப் போட்டி ஈச்சனாரி ரத்தினம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து சுமார் 9,000 மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
5 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிகள், 14, 16, 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. கோவையில் முதன்முறையாக நடைபெறும் இந்தப் போட்டிகளின் தொடக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், அனைத்துத் துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரம் தற்போது விளையாட்டுத் துறையிலும் தமிழக அளவில் முக்கிய இடத்தைப் பிடித்து வருவதாகத் தெரிவித்தார். சர்வதேசத் தரத்தில் உருவாகிவரும் ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் முடிந்து திறக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 5 நாள் போட்டிகள் 9 வெவ்வேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் மதன்செந்தில் தெரிவித்தார். மேலும், கோவையில் முதன்முறையாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கிளஸ்டர் கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெறுவதாகவும், சுமார் 9,000 மாணவர்கள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் பத்து இடங்களில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.