/indian-express-tamil/media/media_files/2025/06/03/JpzQAopZSLLNGaivpm9R.jpg)
துருப்பிடித்த கடாயில் கொஞ்சம் இந்த ஜூஸ்… ஈஸியா கிளீன் பண்ணலாம்!
பொதுவாக நாம் பணம் கொடுத்து வாங்கும் பாத்திரங்களை பார்த்துபார்த்து வைத்திருப்போம். அதில் சிறியதாக கீறல்பட்டாலும் தாங்க முடியாது. அதுபோல சில பாத்திரங்கள் நாம் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருபிடிக்க ஆரம்பித்து விடும். அவை சமையல் பாத்திரங்களாக இருந்தாலும் சரி, விவசாயத்திற்கு பயன்படுத்தும் கருவிகளாக இருந்தாலும் சரி துருபிடித்து விடும். இதனை, கவனிக்காமல் அப்படியே விட்டு விட்டால் பாத்திரம் ஓட்டையாகிவிடும். இந்தப் பதிவில் துருபிடித்த பாத்திரத்தை எப்படி பளிச்சென்று வைப்பது என்று பார்க்கலாம்.
நம் வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களை வைத்தே துருப்பிடித்த மற்றும் கறை படிந்த பாத்திரங்களை சுத்தம் செய்ய முடியும். இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா?
- துருவிய துணி சோப்பு - சிறிதளவு
- கோகோ கோலா (காலாவதியானாலும் பரவாயில்லை)
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை: முதலில், காலாவதியான கோகோ கோலாவை பழைய பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். கோலா கொதிக்க ஆரம்பித்ததும், துருவி வைத்துள்ள துணி சோப்பை அதனுடன் சேர்த்து நன்றாகக் கரைய விடவும். சோப்பு முழுவதும் கரைந்ததும், ஒரு ஸ்பூன் உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து அந்த கலவையில் ஊற்றவும். இந்த கலவை திக்கான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, அதை ஒரு கண்ணாடி பௌலில் மாற்றவும். கலவை நன்றாக ஆறிய பிறகு, ஒரு இரவு முழுவதும் ஃப்ரீசரில் வைத்து உறைய வைக்கவும். மறுநாள், ஃப்ரீசரில் இருந்து எடுத்தால் அது கெட்டியான சோப்பு பார் போல் தயாராக இருக்கும்.
பாத்திரங்களை சுத்தம் செய்யும் முறை: தயாராக இருக்கும் சோப்பை ஸ்கிரப்பரில் சிறிதளவு எடுத்து, துருப்பிடித்த அல்லது கறை படிந்த பாத்திரங்களில் லேசாக தேய்க்கவும். இந்த கலவை அதிக நுரை வராது. பாத்திரம் முழுவதும் சோப்பை தடவிய பிறகு, சிறிது நேரம் ஊற விடவும். குறிப்பாக துருப்பிடித்த இரும்பு கடாய்கள் மற்றும் கறிப்பிடித்த பாத்திரங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊறிய பிறகு, சாதாரண ஸ்டீல் ஸ்கிரப்பர் பயன்படுத்தி நன்றாக தேய்க்கவும். தேய்க்கும்போதே கறைகள் மற்றும் துருக்கள் நீங்குவதை நீங்கள் கண்கூடாக காணலாம். பாத்திரங்கள் நன்றாக சுத்தம் செய்த பிறகு, தண்ணீரில் அலசிவிட்டு, சுத்தமான துணியால் ஈரமில்லாமல் துடைத்து எடுக்கவும். இரும்பு கடாயாக இருந்தால், துடைத்த பிறகு லேசாக எண்ணெய் தடவி வைப்பது துருப்பிடிப்பதைத் தடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.