/indian-express-tamil/media/media_files/2025/06/18/plump body will become-7386fdcb.jpg)
குண்டான உடல் சர்ருனு இளைக்கும்… இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் வேணி
கடுமையான உணவுக்கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி நிலையச் சவால்கள் இல்லாமல், அன்றாட வாழ்வில் சிறு மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். இந்த எளிய வழிமுறைகள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன என்று மருத்துவர் வேணி கூறுகிறார்.
காலை நேரப் பயிற்சி: தினமும் 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்து, மொட்டை மாடியில் நடப்பது அல்லது ஏதேனும் ஒரு உடல் பயிற்சியில் ஈடுபடுவது அந்த நாளை சுறுசுறுப்புடன் தொடங்க உதவும். இது கலோரிகள் எரிக்கப்படுவதற்கும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும் உதவும்.
கவனத்துடன் உண்ணுதல்: சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதற்குப் பதிலாக, தரையில் அமர்ந்து நிதானமாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இது நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனத்தை அதிகரிக்கும், மேலும், விரைவாக வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் அதிகப்படியான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படும்.
நீண்ட நேரம் உட்காருவதைத் தவிர்த்தல்: தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசியில் பேசுவது போன்ற நேரங்களில் முடிந்தவரை அமராமல், நின்று கொண்டே அல்லது நடந்து கொண்டே செய்வது நல்லது. குறிப்பாக, குறிப்பிட்ட நேரம் வரை நின்றுகொண்டே டிவி பார்க்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இது உடல் இயக்கத்தை அதிகரித்து, கலோரிகள் எரிய உதவும்.
நடந்து கொண்டே பேசுதல்: தொலைபேசியில் பேசும்போது, அமர்வதையோ படுப்பதையோ தவிர்த்து, வீட்டைச் சுற்றி நடப்பது அல்லது அறையிலேயே முன்னும் பின்னுமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். உடல் செயல்பாட்டை அதிகரிக்க ஒரு எளிய வழியாகும்.
சமிக்ஞைகளைக் கவனித்தல்: பசி இல்லாதபோது கட்டாயப்படுத்திச் சாப்பிட வேண்டாம். உடலின் பசி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இரவு நேரத்தில் அதிகப் பசி இல்லை என்றால், சமைத்த உணவுக்குப் பதிலாக ஒரு பழத்தைச் சாப்பிடலாம். இது தேவையற்ற கலோரி உட்கொள்வதைத் தவிர்க்கும்.
காஃபின் உட்கொள்வதை குறைத்தல்: வழக்கமாக டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதை வாரத்திற்கு 2 முறை என்று குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை மற்றும் பால் சேர்க்காத சாதாரண டீ அருந்துவதையும் வழக்கப்படுத்தலாம்.
காய்கறிகளைச் சேர்த்தல்: வாரத்திற்கு 2 முறையாவது ஒரு வேளை சமைத்த உணவுக்குப் பதிலாக, கேரட், வெள்ளரி போன்ற பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் என்கிறார் மருத்துவர் வேணி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.