ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுக்பக் என்று புனைப் பெயரிடப்பட்ட நாரை மாற்றுப்பாதையில் 3,676 கிமீ பயணம் செய்து ராஜஸ்தான் வந்தடைந்துள்ளது. சைபீரியன் டெமோசெல் என்ற இந்த நாரை இந்த பயணத்தின் மூலம் வெகுதூரம் புலம்பெயர்ந்து வரும் பறவைகளில் இதுவரை கண்டிராத புதிய சாதனையைப் படைத்துள்ளது.
சுக்பக் என்று புனைப் பெயரிடப்பட்ட இந்த நாரை பலோடி மாவட்டத்தில் உள்ள கிச்சான் என்ற இடத்தில் தரையிறங்கியது. கிச்சானில் உள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயத்தில் கரோலின் சின்னோட் எனும் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி இந்த நாரையை படம் பிடித்துள்ளார். அதன் காலில் பொருத்தப்பட்ட தனித்துவமான மஞ்சள்-நீல வளையத்தை வைத்து இந்த பறவை சுக்பக் தான் என்று அடையாளம் கண்டறியப் பட்டுள்ளது.
மங்கோலியாவில் அடையாளப் படுத்தப்பட்ட ஒரு டெமோசெல் நாரை 2,800 கிமீ நீண்ட தூரப் பயணம் தான் இதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சாதனையாக இருந்தது. தற்போது “சுக்பக் இந்த சாதனையை முறியடித்துள்ளது. ஒரு ஆண் நாரையான சுக்பக்-க்கு, இந்த வருடம் ஜூலை 20-ல் தான் அடையாள வளையம் பொருததப்பட்டதாக ரஷ்ய நாரை ஆய்வாளர், எலினா முட்ரிக் தெரிவித்தார்.
சுக்பக் ஒரு இளம் நாரை, தெற்கு-மத்திய சைபீரியாவிலிருக்கும் டுவா (Tuva Republic) குடியரசிலிருந்து ரஷ்யா, கஜக்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக ராஜஸ்தானில் உள்ள கிச்சானுக்குப் பறந்து வந்துள்ளது.
இது குறித்து பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒரு அங்கமான நாரை வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர் மற்றும் 1000 நாரைத் திட்டத்திற்குப் பங்களிப்பவருமான டவ் லால் போஹ்ரா கூறுகையில், சுக்பக்கின் இந்தச் சாதனைக்குக் காரணம் அதன் அடையாள வளையம் தூரப் பிரதேசமான ரஷ்யாவின் தெற்கு-மத்திய சைபீரியாவில் உள்ள டுவா குடியரசில் பொருத்தப்பட்டது தான் என்று கூறியுள்ளார்.
“வடமேற்கு மங்கோலியாவின் எல்லையையொட்டி, மேல் எனிசி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது டுவா. இங்கு நிலவும் கடுமையான தட்பவெப்ப சூழலின் காரணமாக இதுவரை ஆராய்ச்சியாளர்கள் அங்கு செல்ல முடியவில்லை. முதன் முறையாக இப்போதுதான் இங்கு வெற்றிகரமாகப் பறவைகளுக்கு அடையாள வளையங்களைப் பொருத்தியுள்ளனர். மிகவும் தூரத்தில் உள்ள பகுதிகளில் இந்த வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்து புலம்பெயர்ந்த நாரைகளின் பயணத் தூரம் கணக்கிடப் பட்டுள்ளது என்று போஹ்ரா கூறியுள்ளார்.
சுக்பக்கின் பயணம் மிகவும் சுவாரஸ்யமானதிற்கு மற்றொரு காரணம் வழக்க மில்லாத பாகிஸ்தான் வழிப் பறந்த பாதைதான். “வழக்கமாக, டெமோசெல் நாரைகள் இமாலய பள்ளத்தாக்குகளைக் கடந்து நேபாளம் வழியாக தான் இந்தியா வந்தடையும். இருப்பினும், சுக்பக்கின் வழித்தடம் ரஷ்யா, கஜக்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைக் கடந்து ஜெய்சல்மேர் வழியாக இந்தியாவை வந்தடைந்தது, மாறுபட்ட சுற்றுப் பாதையாக அமைந்திருக்கின்றது. இந்த டெமோசெல் நாரைகள் புலம்பெறும் வகையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டுபிடித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும் போஹ்ரா கூறியுள்ளார்.
தற்போது, கிட்டத்தட்ட 20,000 - உள்ளூர் வாசிகளால் குர்ஜன் என்றழைக்கப்படும், டெமோசெல் நாரைகள் குளிர் காலவாசத்திற்காகக் கிச்சானில் தங்கியிருக்கின்றன. சமீபத்தில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கிச்சான் இந்தப் பெருமிதமிக்க பறவைகளின் பாதுகாப்பான புகலிடமாக விளங்குகிறது. கிச்சான் இந்தியாவின் முதல் டெமோசெல் நாரைகளின் சரணாலயமாகும். இந்த மைல்கல், புலம்பெயரும் பறவைகளைப் பற்றிய நமது புரிதல்களை மேம்படுத்துவது மட்டுமின்றி இந்த இனங்களையும் அவற்றின் தங்குமிடங்களையும் பாதுகாக்கும் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“