கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலில், ஆடிக்குண்டம் திருவிழா இன்று (ஜூலை 29) வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு அருள் பெற்றுச் சென்றனர். இந்நிலையில், இந்த மத நல்லிணக்கத் திருவிழாவில், தி.மு.க. சிறுபான்மையினர் அணி சார்பில் இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/29/aadi-kundam-2-2025-07-29-12-20-18.jpg)
ஆடிக்குண்டம் திருவிழா என்பது கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்வு. லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கையுடன் தீ மிதித்து, அம்மனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். இத்தகைய திருவிழாவில், மத வேறுபாடுகளைக் கடந்து மனிதம் மேலோங்கிய செயல்பாடு அரங்கேறியுள்ளது.
தி.மு.க. சிறுபான்மையினர் அணியின் மாவட்ட அமைப்பாளர் உசேன் தலைமையில், துணை அமைப்பாளர்கள் ஜாஹீர் உசேன், அயூப், பிரான்சிஸ், மைக்கேல், சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், இந்த விழாவிற்கு வந்திருந்த சுமார் 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர். வெயிலையும், கூட்டத்தையும் பொருட்படுத்தாமல், உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டது அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/29/aadi-kundam-2025-07-29-12-19-07.jpg)
"இனமென பிரிந்தது போதும்..." என்ற உன்னதமான கருத்தை இந்தச் செயல் மூலம் அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர். மதங்கள் வெவ்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தாலும், மனிதநேயம் மற்றும் ஒற்றுமை என்பதே அனைத்து மதங்களின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த அன்னதான நிகழ்வு, ஒருவரது மதம் எதுவாக இருந்தாலும், பிறருக்கு உதவி செய்வதும், சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பறைசாற்றுகிறது.