ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்பட்டாலும், ஆடி 18-ஆம் நாள் சிறப்பு வாய்ந்ததாகக் கொண்டாடப்படுகிறது. காவிரியாறு மற்றும் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த நாள், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள், திருச்சி, கோவை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி, வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/03/valaikappu-2025-08-03-13-32-54.jpg)
திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு:
திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, மாயவரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆடிப் பெருக்கு விழா களைகட்டியது. திருச்சி முக்கொம்பு, கல்லணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் போன்ற காவிரி கரையோரங்களில் அதிகாலையிலிருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். புதுமணத் தம்பதியினர் மஞ்சள் கயிறு கட்டி, தாலி பிரித்து கட்டும் வைபவங்கள் விமர்சையாக நடைபெற்றன.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/03/aadi-18-1-2025-08-03-13-19-48.jpg)
பெண்கள் வாழை இலைகளில் முக்கனி, காப்பரிசி, காதால கருகமணி, முளைப்பாரி போன்றவற்றை வைத்து காவிரித் தாய்க்கு நன்றி தெரிவித்தனர். இந்த வருடம் ஆடிப்பெருக்கு ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், குடும்பத்துடன் நீர்நிலைகளில் கூடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. மேலும், மேட்டூர் அணையில் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தினர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/03/aadi-18-2-2025-08-03-13-19-48.jpg)
கோவையில் களைகட்டிய ஆடிப்பெருக்கு:
கோவையில் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நொய்யல் ஆற்றுப் படித்துறையில் புனித நீராடிய பொதுமக்கள், இறந்துபோன குழந்தைகள் மற்றும் கன்னிப்பெண்களுக்கு இலைப்படையல் வைத்து வழிபட்டனர். இது பித்ரு தோஷத்தை நீக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. புதுமணத் தம்பதியினர் தாலி மாற்றிக் கொண்டதோடு, திருமண மாலைகளை ஆற்றில் விட்டு வழிபட்டனர். பக்தர்கள் நீர்நிலைகளில் உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருக்க, தன்னார்வலர்கள் குழு அவற்றை சேகரித்து ஆதரவற்ற இல்லங்களுக்கு அளித்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/03/aadi-18-1-2025-08-03-13-19-48.jpg)
மதுரையில் விழா ஏற்பாடுகள்:
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா ஆகஸ்ட் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்தத் திருவிழாவில், கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம், தருமிக்கு பொற்கிழி, பிட்டுக்கு மண் சுமந்த லீலைகள் எனப் பல திருவிளையாடல்கள் நடைபெற உள்ளன. செப்டம்பர் 1-ஆம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகமும், செப்டம்பர் 5-ஆம் தேதி சட்டத்தேரோட்டமும் நடைபெறும். செப்டம்பர் 6-ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.