Aadi Amavasai Tamil News: இன்று ஆடி அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்க சரியான நேரம் எது? தர்ப்பணம் கொடுக்கும் முறை என்ன? என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க முக்கிய நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்க, 6 நாட்கள் உசிதம். ‘உத்தராயன புண்ணிய காலம்’ என்று சொல்லப்படும் தை மாதம் முதல் நாள், சிவராத்திரி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி மாதத்தின் முதல் நாள், ஆடி அமாவாசை, சித்திரை மாதம் முதல் நாள், அட்சய திருதியை ஆகியவையே அவை.
Aadi Amavasai 2020 Tharpanam Date, Time: ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யும் முறை
இவற்றில் ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாளில், சந்திரன் மகிழ்ச்சியாக இருப்பதாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியை பெறலாம்.
யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றி பலருக்கும் சந்தேகம் ஏற்படுவது உண்டு. தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம்- அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் மிகவும் விசேஷமானது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம்.
ஆடி அமாவாசை தர்ப்பணம் (பழைய படம்), இடம்- கன்னியாகுமரி, புகைப்படம்: ஜேக்சன் ஹெர்பி
இந்த ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 20-ம் தேதி வருகிறது. ஜூலை 19-ம் தேதி இரவு 12.17 மணிக்கு தொடங்கும் ஆடி அமாவாசை, ஜூலை 20-ம் தேதி இரவு 11.35 மணி வரை உள்ளது. அதனால் ஜூலை 20-ம் தேதி காலை சூரிய உதயத்திற்குப் பின் மாலை வரை தர்ப்பணம் கொடுக்க மிக சிறப்பான நேரம் என நம்பப்படுகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொது முடக்கம் அமலில் இருப்பதால் கூட்டம் திரள அனுமதி இல்லை. அவரவர் இல்லம் அல்லது வெகு அருகிலுள்ள இடங்களில் அரசு விதிமுறைகளைப் பின்பற்றியே தர்ப்பணம் கொடுக்க முடியும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"