/indian-express-tamil/media/media_files/2025/07/23/aadi-amavasai-trichy-kaveri-river-area-special-arrangement-tamil-news-2025-07-23-16-59-53.jpg)
இந்த ஆண்டு ஆடி 8 ஜூலை 24ம் தேதி அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25 ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. இருந்தாலும் ராகு காலம், எமகண்டத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது.
ஆடி மாத அமாவாசை, தெய்வங்களின் அருளையும், முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்கான மிக முக்கியமான நாளாகும். தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு நேரடியாக வருவதாக ஐதீகம்.
ஆடி அமாவாசையில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி, தானம் ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை. திதி நாட்களில் முன்னோர்களை வழிபடாதவர்கள், பூஜை செய்யாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் புன்னிய நதிகளில் நீராடி தர்ப்பனம் கொடுத்தால், முன்னோர்கள் அவர்களுக்கு ஆசி வழங்குபவர் என்பதால், முன்னோர்களின் மனங்களை மகிழ்வித்து, அவர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஆடி அமாவாசை மிகவும் ஏற்ற நாளாகும்.
இந்த வருடம் ஆடி அமாவாசை ஆடி 8 ஜூலை 24 ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்று புனித நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்கு சென்று, அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எளிமையாக எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதுவும் முடியாதவர்கள் அன்னதானம் செய்யலாம். இதனால் பித்ரு தோஷம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
இந்த ஆண்டு ஆடி 8 ஜூலை 24ம் தேதி அதிகாலை 03.06 மணிக்கு துவங்கி, ஜூலை 25 ம் தேதி அதிகாலை 01.48 வரை அமாவாசை திதி உள்ளது. இருந்தாலும் ராகு காலம், எமகண்டத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பும், பகலில் உச்சிவேளைக்கு பிறகும் திதி, தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது நியதி. ஆடி 8 ஜூலை 24ம் தேதி வியாழக்கிழமை காலை 6 முதல் 07.30 மணி வரை எமகண்டமும், பகல் 01.30 முதல் 3 வரை ராகு காலமும் உள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/0ed3300b-9fb.jpg)
இதனால் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலை 07.35 மணிக்கு பிறகு, பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். அதே போல் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆடி அமாவாசை அன்று தானம் கொடுப்பது, காகத்திற்கு உணவு அளிப்பது போன்ற செயல்கள் முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும். இதனால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். மேலும், அன்றைய தினம் முன்னோர்களுக்கு திதி கொடுத்த பிறகே வழக்கமான இறை வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். பகலில் முன்னோர்களுக்கு இலை போட்டு படையல் வைத்து வழிபடுபவர்கள் பகல் 01.25 மணிக்கு முன்பாக படையல் போட்டு, விரதத்தை நிறைவு செய்து விடலாம்.
அன்றைய தினம் யாராவது ஒருவருக்காவது அன்னதானம் வழங்குவது சிறப்பு. அதே போல் வீடு தேடி யார் வந்தாலும் அவர்களை உபசரித்து அனுப்ப வேண்டும். முன்னோர்கள் யாரின் வடிவத்திலும் வரலாம் என்பதால் உணவு அளித்து அனுப்புவது நல்லது. யாருக்கும் உணவு அளிக்க முடியாதவர்கள் காகத்திற்கு உணவு அளிக்கலாம். பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வெல்லம் கலந்த பச்சரிசி ஆகியவற்றை உணவாக அளிக்கலாம். முன்னோர்களுக்கு புதிய துணிகள் வைத்து படைக்கும் வழக்கம் உள்ளவர்கள், அதை வழிபட்ட பிறகு யாராவது வயதானவர்களுக்கு தானமாக அளிக்கலாம்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் ராமேஸ்வரம், திருச்செந்தூர், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட புன்னிய கடற்கரையிலும், ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, திருவையாறு ஐயாறப்பர் படித்துரை, மயிலாடுதுறை துலா கட்டம், திருக்கண்டியூர் ஆற்றங்கரை என புன்னிய நதியாக பார்க்கப்படும் காவிரி பாயும் கரைகளில் புனித நீராடி தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவர். இதனால் இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காவல்துறையினர் செய்திருக்கின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/a45ae577-51a.jpg)
இன்று நள்ளிரவு முதலே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறைக்கு வருவர் என்பதால் திருச்சி மாநகர போலீஸார் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றனர். திருவானைக்காவல் மாம்பழச்சாலையிலிருந்து அம்மாமண்டப சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதிகாலை முதல் நண்பகல் வரை இந்த தடை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், சுழலும் கேமராக்களுடன் கூடிய போலீஸ் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன. காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், காவலர்கள் என நூற்றுக்கணக்கான போலீஸார் அம்மாமண்டப படித்துறையில் பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர். மேலும், காவிரி கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நீராட அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்புக்காக தீயணைப்புத்துறை வீரர்களும் ரப்பர் படகுகளில் காவிரி ஆற்றில் ஒலி பெருக்கியுடன் சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது. மாநகராட்சி சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, தூய்மைப்பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us