தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு.
ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஆடிக்கிருத்திகை என இத்தனை வைபவங்கள் இந்த மாதத்தில் வருகின்றன..
இம்மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானவை. அதனால்தான், ஆடிச் செவ்வாயிலும் வெள்ளியிலும் ஞாயிற்றுக் கிழமையிலும் அம்பாள் வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை.
இன்று காலையும் மாலையும் வீடுகளில் விளக்கேற்றுங்கள். வீட்டில் சுமங்கலியாக இறந்தவர்களின் படத்துக்கு பூக்களிடுங்கள்.
அம்பாள் படங்களுக்குப் பூக்களிடுங்கள். செந்நிற மலர்கள் அம்பிகைக்கு உகந்தவை. அம்பாள் படத்துக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். பழங்கள், வெற்றிலை, பாக்கு வைத்து, ஏதேனும் ஒரு பாயசம் நைவேத்தியமாகப் படைத்து, பூஜையில், புடவையோ ஜாக்கெட் பிட்டோ வைத்து அம்மனை மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள்.
ஆடி வெள்ளிக்கிழமை அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பான பலன் தரும். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள், அன்றைய தினம் உப்பு சேர்க்காத உணவு அல்லது பழம், பால் மட்டும் சாப்பிடுவதாலும் விரதம் இருந்த பலனை பெறலாம்.
இன்று அம்பாளை நினைத்து, ஒருவருக்கேனும் புடவையோ ஜாக்கெட் பிட்டோ... மங்கலப் பொருட்களோ வழங்குங்கள். உங்கள் வாழ்வில், இதுவரை நீங்கள் எதிர்பார்த்த எல்லா நல்லதுகளும் உங்களை தேடி வந்தடையும். வளமும் நலமும் தந்து, சகல செளபாக்கியங்களுடன் வாழச் செய்வாள் தேவி…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“