Advertisment

ஆனந்த தீர்த்தர் வாழ்க்கைப் பாடம்: தலித் விடுதலைக்கு பேச்சும், எழுத்தும் போதாது

Aanantha Theerthar and Dalit Freedom: நவம்பர் 21, ஆனந்த தீர்த்தரின் நினைவு நாள். அதையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aanantha Theerthar and Dalit Freedom, Aanantha Theerthar work at tamil nadu, Aanantha Theerthar as Gandhian, ஆனந்த தீர்த்தர், ஆனந்த ஷெனாய், சுவாமி ஆனந்த தீர்த்தர்

எ.பாலாஜி அந்தணர்

Advertisment

2015-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அழகரசன், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தகவல் பறிமாறப்பட்டது. ஸ்டாலின் ராஜாங்கம் சொன்ன தகவல் அது...

“அம்பேத்கர், இந்தியாவில் கிராமங்களில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகள் பற்றி இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்த இரண்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை. அதை எழுதியவர் ஆனந்த தீர்த்தர் என்கிற ஒரு காந்தியவாதி.

அவர் ஹரிஜன சேவா சங்கத்தின் தென்மண்டலச் செயலாளராக இருந்துள்ளார். மேலூரில், ஹரிஜனங்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் போராடியிருக்கிறார். அம்பேத்கரின் இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு மேலூருக்கு கள ஆய்வு சென்றேன். ஆனந்த தீர்த்தர் மேலூரில் இருந்த காலத்தில் அவரை நேரில் பார்த்த தலைமுறையினரோடு பேசியபோது, அவரின் அர்ப்பணிப்புள்ள போராட்டத்துக்காக அவர்களின் வாழ்க்கை நினைவுகளில் சுவாமி ஆனந்த தீர்த்தர் பெருமை மிகு சித்திரமாக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால், அவரைப் பற்றிய எழுத்துப்பூர்வமான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நான் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரைப் பற்றி தேடத் தொடங்கியபோதுதான், அவர் ஒரு முன்மாதிரியில்லாத சமூக சீர்திருத்தப் போராளியாக வாழ்ந்தார் என்பது தெரியவந்தது. பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பழைய அம்பேத்கரியர்கள் காந்தியை எதிரியாகவும் காந்தியவாதிகள் அம்பேத்கரை விரோதியாகவும் கருதி வந்தனர். இந்த எதிர் நிலைகளில் புதிய அம்பேத்கரியர்களிடம் மாற்றமேற்பட்டுள்ளது.

சாதியால் ஒடுக்கப்பட்ட பட்டியல் இன மக்களுக்கு கருத்தியல் ரீதியாக நட்பு சக்திகள் என்று சொல்லிக்கொண்டவர்களைவிட எதிர்நிலையாகக் கருதப்பட்ட காந்தியவாதிகள் ஹரிஜனசேவா சங்கத்தின் மூலம் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்துக்கு செய்த பணிகளை சீர்தூக்கிப் பார்த்து, காந்தியையும் அர்ப்பணிப்புள்ள காந்தியவாதிகளையும் இணக்கமாக அனுகி வருகின்றனர்.

அதே போல, காந்தியவாதிகளும் சமகாலத்தில் இறுகிவரும் சமூக நிலைமைகளையும் அதில் தலித்துகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் கண்டு அம்பேத்கரின் அன்றைய அரசியல் செயல்பாடுகளையும் அம்பேத்கரியர்களின் இன்றைய செயல்பாடுகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர்.

தலித்துகளுக்காக அர்ப்பணிப்புடன் உண்மையாக ஹரிஜன முன்னேற்றத்தில் செயல்பட்ட ஒரு காந்தியவாதிதான் ஸ்வாமி ஆனந்த தீர்த்தர். ஆனந்த ஷெனாய் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் கேரளாவில் உள்ள தலைச்சேரியில் 1905ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி செல்வாக்குமிக்க ஒரு சரஸ்வாத பிராமண குடும்பத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே ஆண்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ஆனந்த ஷெனாய், சாதியால் ஒடுக்கப்பட்டவர்களிடம் இயல்பாகவே பரிவுகொண்டிருந்தார். ஆனந்த ஷெனாய் கேராளாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவருடைய இளமைக்காலம் முதல் தமிழகத்துடன் தொடர்புற்றிருந்தது.

இவர் மெட்ராஸில் இருந்த பிரஸிடென்ஸி கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் மற்றும் எம்.ஏ. இயற்பியலும் படித்தார். இந்தக் கால கட்டத்தில்தான் 1924-ம் ஆண்டு கே.கேளப்பன் டி.கே.மாதவன் போன்றவர்களால் நடத்தப்பட்ட புகழ்பெற்ற வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் இவருடைய மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சிறுவயதிலிருந்தே காந்தியின் ‘யங் இந்தியா’ இதழைப் படித்துவந்த ஆனந்த ஷெனாய் இயல்பாகவே காந்தியின் மீது பற்றுகொண்டிருந்தார். கேரளாவில் டி.ஆர்.கிருஷ்ணமாச்சாரியால் தொடங்கப்பட்ட சபரி ஆசிரமம் அதன் செயல்பாடுகளிலும் காங்கிரஸ் நடவடிக்கைகளிலும் இணைந்திருந்தார்.

அதே நேரத்தில் பொதுப்பாதைகள், பொதுக்குளம், சலூன் போன்ற இடங்களில் நுழைய மறுக்கப்பட்ட தீண்டப்படாதவர்களை அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று தாக்குதல்களைச் சந்தித்தவர் ஆனந்த ஷெனாய்.

இந்த நிலையில் ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையுடன் ஆன்மீக வழியில் கேரளாவில் சமூகச் சீர்த்திருத்தத்தை மேற்கொண்டிருந்த நாராயண குருவின் இயக்கம் அவரை ஈர்த்தது. ஆனந்த ஷெனாய் முதன் முதலாக கோயம்புத்தூரில் தான் நாராயண குருவைச் சந்தித்தார்.

முதல் சந்திப்பிலேயே நாராயண குரு இவருடைய அர்ப்பணிப்பையும் தீண்டப்படாதவர்களின் முன்னேற்றத்தில் அவருக்கிருந்த அக்கறையையும் புரிந்துகொண்டார். இருவருக்கும் இடையே பின் நிகழ்ந்த சந்திப்புகளில் நாராயண குரு அவருடைய தர்ம பரிபாலன சங்கத்தில் துறவியாவதற்கு இருந்த நிபந்தனைகளை எல்லாம் பார்க்காமல் உடனடியாக ஆனந்த ஷெனாய் அவர்களுக்கு தீர்த்தம் அளித்து சந்நியாசம் வழங்கினார். அவருடைய பெயரையும் ஆனந்த தீர்த்தர் என்று வழங்கினார்.

துறவு மேற்கொண்ட ஆனந்த தீர்த்தர் தீண்டப்படாதவர்களுக்கு பணி செய்வதையே தனது துறவின் நோக்கமாகக் கொண்டார். இப்படி காந்தியவாதி + நாராயண குரு கொள்கைகளின் கூட்டு ஆளுமையாக ஆனந்த தீர்த்தர் உருவானார்.

ஆனந்த தீர்த்தர் கேரளாவில் தீண்டப்படாதவர்களின் கல்வி, மற்றும் பொது உரிமைகளில் கவனம் செலுத்தி வந்தார். இந்த கால கட்டத்தில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ள ஆனந்த தீர்த்தர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்களின் ஒரு குழு கேரளாவில் இருந்து திருச்சி வழியாக வேதாரண்யத்துக்கு யாத்திரை மேற்கொண்டனர்.

சிறப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் ஆனந்த தீர்த்தர் திருச்சியில் ஹரிஜன சேரிகளைப் பார்த்து அவர்களின் துன்பங்களை அறிந்தார். அப்போது மாலை நேரங்களில் நடைபெற்ற கூட்டங்களில் தீண்டப்படாதவர்கள் மட்டும் தனியாகப் பிரித்து அமரவைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த ஆனந்த தீர்த்தர் அது குறித்து ராஜாஜியிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு ராஜாஜி அவர்களுடன் யாரேனும் அமர விரும்பினால் தடை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

கேரளாவில் பொதுப்பாதைகளில் தீண்டப்படாதவர்களை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தியிருந்த ஆனந்த தீர்த்தர், தமிழகத்தில் வேதாரண்யம் உப்புச் சத்தியா கிரகத்துக்குச் செல்லும் வழி நெடுக இருந்த குளங்களுக்கு தீண்டப்படாதவர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது சாதி இந்துக்கள் அனைத்து இடங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பாலான இடங்களில் சத்தியாகிரகிகள் யாருக்கும் இதில் துணிவில்லை. இந்த சம்பவங்கள் அவருக்கு தமிழ்நாட்டில் ஹரிஜனங்களின் பரிதாப நிலையைப் புரிந்துகொள்ள உதவியது.

தீண்டப்படாதவர்கள் முன்னேற்றம் அடைய கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவர் வடக்கு மலபார் பகுதியில் பையனூரில் ஸ்ரீ நாராயண வித்யாலயா என்ற பள்ளியைத் தொடங்கினார். வறிய நிலையில் இருந்த தீண்டப்படாதவர்களுக்கு பல இடங்களில் விடுதிகளை நடத்தினார். அதோடு அவர்கள் சமூக மரியாதையும் பொதுச் சமூக உரிமைகளையும் பெற வேண்டும் என்று விரும்பினார். அதனால், தீண்டப்படாதவர்களுக்கு மறுக்கப்பட்ட பொதுப்பாதைகள், கோயில் நுழைவு, பள்ளிக்கூடங்களில் சேர்தல், பொதுக்குளத்தில் நீரெடுத்தல், சலூனில் முடிவெட்டுதல், ஓட்டல்களில் சாப்பிடுதல் போன்ற பொது உரிமைகளுக்காக தீண்டப்படாதவர்களை அழைத்துச் சென்று கட்டுப்பாடுகளை உடைத்தார். எல்லா இடங்களிலும் காந்திய முறையில் அமைதியான வழியிலேயே போராட்டம் நடத்தினார்.

சாதிய கட்டுகளை மீறிய எல்லா இடங்களிலும் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் தாக்கப்படாத போராட்டங்களே இல்லை என்று கூறலாம். அவருடைய போராட்டங்களை பட்டியலிட இந்த கட்டுரை போதாது என்ற அளவுக்கு எண்ணற்ற போராட்டங்கள். அவர் வெறுமனே போராட்டங்களோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்த கட்டமாக அவர் சட்டவழியிலும் தனது போராட்டத்தை தொடர்ந்தார் என்பதில் இருந்தே அவர் பொதுவான காந்தியவாதிகளிடமிருந்து மாறுபடுகிறார்.

பொதுவாக சாதியைப் பற்றிய அனுகுமுறையில் சாதி இந்துக்கள் அவர்களாகவே மனமாற்றம் அடைய வேண்டும். அவர்களை வற்புறுத்தி சாதிய ஒடுக்குமுறையை ஒழிக்க முடியாது என்பது காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. அதேபோல, சாதிய ஒடுக்குமுறை நிகழ்த்தும் சாதி இந்துக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வற்புறுத்த மாட்டேன். ஆனால், ஹரிஜனங்கள் சாதி இந்துக்கள் மீது சட்டரீதியா வழக்கு தொடர்வார்களானால் அதைத் தடுக்க மாட்டேன் என்பதுதான் காந்தியின் நிலைப்பாடாக இருந்தது.

காந்தியவாதியான ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் இந்த இடத்தில்தான் காந்தியின் அணுகுமுறையிலிருந்து மாறுபடுகிறார். சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்கள் அவர்களாகவே மனம் மாறுவார்கள் என்று நினைத்த ஸ்வாமி ஆனந்த தீர்த்தருக்கு நடைமுறையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அதனால், சாதியத் தடைகளை மீறி போராடுவதன் மூலமே ஹரிஜனங்கள் உரிமையைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். அதனை சட்ட ரீதியாகவும் முன்னெடுத்தார்.

காந்தியின் மறைவுக்குப் பின்னரும்கூட தொடர்ந்து செயல்பட்டுவந்த ஹரிஜன சேவா சங்கம் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரை தென்மண்டல அலுவலராக நியமித்தது. 1952 முதல் 1958 வரை இந்தப் பொறுப்பில் இருந்து செயல்பட்டார்.

முதலில் தமிழகத்தின் ராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டார். இப்பகுதி கிராமங்களில் ஹரிஜனங்களுக்கு கோயில் நுழைவு, பொதுக்கிணறு, டீ கடை, சலூன் ஆகிய இடங்கள் மறுக்கப்பட்டதைக் கண்டார். மேலும், ஹரிஜன நலத்துறை பள்ளிகளிலேயே கூட பாகுபாடு இருந்ததை அறிந்தார். ஹரிஜனங்கள் ஒரு கௌரவமான வேலையை செய்யக் கூட சாதி இந்துக்கள் அனுமதிப்பதில்லை என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள 30 கிராமங்களைச் சேர்த்து தனது தீண்டாமை ஒழிப்பு பணியைத் தொடங்கினார். முதலில் அவர் சாதி இந்துக்களின் கண்களைத் திறக்கும் விதமாக துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு கிராமங்கள் தோறும் விநியோகித்தார். ஆனால், சாதி இந்துக்களின் மூடநம்பிக்கையை ஒழித்து சாதிய மனத்தில் விழிப்புணர்வை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்தார். ஹரிஜனங்கள் நுழைவு எங்கெல்லாம் மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் ஹரிஜனங்களை அழைத்துச் சென்று தீண்டாமைக்கு அறைகூவல் விடுத்தார். ஹரிஜனங்களின் மீதான தீண்டாமை, சாதி பாகுபாடு நடைமுறைகளுக்கு எதிராக அவர் ஆண்டுக்கு நூறு வழக்குகளுக்கு மேல் பதிவு செய்தார்.

தமிழகத்தில் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் போராட்டங்கள்

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் முதலில் மாங்குளம் கிராமத்தின் ஹரிஜனங்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு அழைத்துச் சென்று தனது போராட்டத்தை தொடங்கினார். ஸ்வாமியின் இந்த செயலால் கோபமடைந்த சாதி இந்துக்கள் ஹரிஜனங்களின் மீது சமூகத் தடை விதித்தார்கள். இதனால் வேலைவாய்ப்பை இழந்த ஹரிஜனங்கள் வறுமையில் உழன்றனர். ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் மற்றும் ஹரிஜன சேவா சங்க தலைவர்களின் உறுதியான தலையீட்டுக்கு பின்னரே இந்த தடை திரும்பப் பெறப்பட்டது.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 1952ம் ஆண்டு ஜனவரி மாதம் மாங்குளத்தில் ஒரு பிராமணர் ஹோட்டலுக்கு ஹரிஜனங்களை அழைத்துச் சென்றார். அதற்காக சாதி இந்துக்களின் கிராம முன்சீஃப் ஒரு கட்டையால் ஸ்வாமியை இரக்கமற்ற முறையில் தாக்கியதில் ஒரு கால் உடைந்தது. தாக்கியவர்களுக்கு எதிராக ஸ்வாமி போலீஸில் புகார் செய்தார். இந்த சம்பவத்தை ஸ்டாலின் ராஜாங்கம் கள ஆய்வு மேற்கொண்ட பகுதியில் ஸ்வாமியை நேரில் பார்த்தவர்கள் நினைவு கூர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல, ஸ்வாமி ஹரிஜன சிறுவர்களுடன் மேலவளவு கிராமத்தில் தேநீர் கடைக்கு போனபோது, சாதி இந்துக்களிடமிருந்து கடுமையான தாக்குதலைச் சந்தித்தார்.

ஆத்துக்குளம் கிராமத்தில் ஹரிஜனங்களுடன் பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, சாதி இந்துக்கள் கிணற்றில் குப்பைகளைப் போட்டார்கள். இது பற்றி அவர் போலீஸில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்தார்.

வேலூர் அருகே ஒரு கிராமத்தில் ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் ஒரு ஹரிஜன சிறுவனுடன் தேநீர் கடைக்கு சென்றபோது அந்த வட்டார சாதி இந்துக்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அந்த சிறுவன் வெளியே ஓடி கிராம அலுவலருக்கு தகவல் அளித்த பிறகு, கிராம அலுவலரின் உத்தரவின் பேரில் சாதி இந்துக்களுக்கு எதிராக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோட்டையடி கிராமத்தில் ஹரிஜன சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுத்தபோது, ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் முடிவெட்டுபவருக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார்.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 1954ம் ஆண்டு மார்ச் மாதம் சூரக்குடி கிராமத்தில் ஒரு பொதுக்குளத்தில் தண்ணீர் எடுப்பதற்கு ஹரிஜன தேவேந்திரர்களுடன் சென்றார். இதனால், கிராமத்தவர்களால் பொருளாதார தடைவிதிக்கப்பட்டது. ஹரிஜன தேவேந்திரர்களுக்கு ஜமீன்கள் நிலம் குத்தகை அளிக்கவும் விவசாய வேலை அளிக்கவும் மறுத்தனர். வேலையாட்களை முழுவீச்சில் மீட்டெடுப்பதற்காக ஹரிஜன சேவா சங்கம் பாசன வசதிக்காக கரை கட்டுமான வேலையை எடுத்தது. அந்தச் சூழலில், ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் 18 ஏக்கர் அரசு நிலத்தை குத்தகை எடுத்து அதை ஹரிஜனங்களுக்கு விவசாயம் செய்ய அளித்தார். அதில் ஹரிஜனங்கள் விளைவித்த பயிரை சாதி இந்துக்கள் அழித்தனர். இதை ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் போலிஸுக்கு எடுத்துச் சென்றார். போலீஸார் சாதி இந்துக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தாலும், சாதி இந்துக்களின் செல்வாக்காலும், அழுத்தத்தாலும் பணிந்து வழக்கு திரும்பப்பெறப்பட்டது.

மேலூரில் அரசு பள்ளிகளில் ஹரிஜன மாணவர்கள் மீதான சாதிய பாகுபாடுகளை ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் தீவிரமாக எதிர்த்தார். கிராமங்களின் தெருக்களில் ஹரிஜனங்கள் சைக்கிள் ஓட்ட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார்.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் சாவடிகளில் ஹரிஜனங்களுக்கு அநியாயமான முறையில் கொடூரமான தண்டனை வழங்குவதற்கு எதிராக போராட்டங்களை நடத்தினார். இதனை முடிவுக்கு கொண்டுவர துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விரிவான பிரச்சாரம் மேற்கொண்டார். சாவடி பஞ்சாயத்துகளில் ஹரிஜனங்கள் மீதான சாதி பாகுபாடுகளுக்கு எதிராக அரசிடமும் போலீஸாரிடம் முறையிட்டார்.

இப்படி எண்ணற்ற போராட்டங்களையும் ஹரிஜனங்கள் முன்னேற்றத்தில் கல்விப் பணியையும் மேற்கொண்ட ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் பணியை அங்கீகரிக்க ஹரிஜன சேவா சங்கம் தவறியது. சாதி இந்துக்களின் மனநிலையை மாற்றுவதால் மட்டுமே தீண்டாமை ஒழிப்பு சாத்தியம் என்று நம்பிய அவர்கள் ஆனந்த தீர்த்தரின் போராட்ட வழிமுறையில் சிக்கல் உள்ளதாகக் கருதினார்கள். அவர்களுடைய அரசியல் லாபத்துக்காக சாதி இந்துக்களுக்கு ஆதரவாக எதிர் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதைத்தொடர்ந்து ஹரிஜன சேவா சங்கத்திடமிருந்து ஸ்வாமி ஆனந்த தீர்த்தருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் அவருடைய பணி மையம் மேலூரில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டது. ஸ்வாமி ஹரிஜன சேவா சங்கத்தின் பணியிலும் தலைமையிலும் நம்பிக்கை இழந்தார்.

ஹரிஜனங்களின் முழு விடுதலையில் ஹரிஜன சேவா சங்கம் லட்சியம்கொள்ளவில்லை என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், அது இந்து மதத்தின் பல்வேறு சாதிகளுடைய தொகுப்பில் லட்சியம் கொண்டிருப்பதாகவும் உணர்ந்தார். ஸ்வாமி ஆனந்த தீர்த்தரோ ஹரிஜனங்களின் முழு விடுதலையில் லட்சியம் கொண்டிருந்தார். மற்ற விஷயங்கள் எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது.

அவர் ஹரிஜனங்களுக்கு உணவு, நிலம், தீண்டாமையிலிருந்து முழு விடுதலை அவசியம் தேவை என்று ஹரிஜன சேவா சங்க பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். ஹரிஜன சேவா சங்கத்தின் மத்தியக் குழுவோ அவருடைய கடும் எதிரியான கோபாலசாமியின் கீழ் வேலை செய்ய கேட்டுக்கொண்டது. அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்து கேரளாவில் அவருடைய பணியைத் தொடருவதாகக் கூறி 1958ல் கேரளாவுக்கு திரும்பினார்.

பின்னாட்களில், நன்றி மறவாத தமிழ்நாட்டு மக்கள் ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் பணிகளைப் புரிந்துகொண்டு 1985ம் ஆண்டு அவரை மதுரைக்கு வரவழைத்து அவருடைய சேவைக்காக பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். வாழ்நாள் முழுவதும் தன்னலமில்லாதா போராளியாகவே வாழ்ந்த ஸ்வாமி ஆனந்த தீர்த்தர் நவம்பர் 21, 1987 ஆம் ஆண்டு மறைந்தார்.

பொதுவாக சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்தே நடத்தப்பட்டுவந்துள்ளது. கிராமங்களில் தலித்துகளுக்கான பொது உரிமைப் போராட்டங்கள் அந்த மக்களாலேயே நடத்தப்பட்டது என்றே பதிவாகிவந்துள்ளன.

அப்படி போராட்டம் நடத்தியவர்கள் தங்களை அம்பேத்கரோடு அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இன்றும் கூட இப்படியான போராட்டங்களை நடத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் அம்பேத்கரைப் பதாகையாகக் கொண்டிருகிறார்கள். இதிலிருந்து முற்றிலும் மாறாக ஒரு காந்தியவாதி சாதியம் அதன் முழு வீர்யத்தோடு நிற்கும் கிராமங்களில் நேரடியாக எதித்தார் என்பது சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானது.

ஸ்வாமி ஆனந்த தீர்த்தரைப் போல தன் வாழ்நாள் முழுவதும் ஹரிஜனங்களுக்கான கல்விப்பணியையும், தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களையும் நடத்தியவர்கள் என்று தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லிக்கொள்வர்கள் மட்டுமல்ல தலித் தலைவர்களில் கூட எவரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.

தலித்துகள் தங்களின் பொது உரிமை, கல்வி வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்காக போராடும்போது தலித்துகளுக்கு ஆதரவாக இருப்பதாகத் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள்,, முற்போக்கு சக்திகள், அனைவரும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் ஆதரவு தெரிவிப்பதையே மிகப்பெரிய சேவையாக நினைக்கின்றனர். உண்மையில் அவர்களின் ஆதரவான எழுத்தும் பேச்சும் மட்டுமே போதுமானவை அல்ல. ஆனந்த தீர்த்தரைப் போன்ற செயல்பாடுகளே அவசியம்.

அம்பேத்கர் காந்தியையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து வந்தபோதிலும், ஸ்வாமி ஆனந்த தீர்த்தரின் ஒப்பற்ற பணியைப் புரிந்துகொண்டதால்தான் அவர் நடத்திய ஸ்ரீ நாராயண வித்யாலயா பள்ளியை காந்தி மட்டுமல்ல அம்பேத்கரும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளார்.

(கட்டுரையாளர் எ.பாலாஜி அந்தணர், பத்திரிகையாளர். நவம்பர் 21, ஆனந்த தீர்த்தரின் நினைவு நாள். அதையொட்டி இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

 

 

Tamilnadu Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment