ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும் பித்ரு வழிபாடும் மிக மிக அவசியம் என்கிறது சாஸ்திரம்.
எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செய்யவேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும். நிம்மதியும் சந்தோஷமுமாக வாழலாம்.
ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் சிரார்த்தம் செய்தாலும், ஆடி மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் சிரார்த்தம் செய்தாலும் பித்ருக்களுக்கு 12 வருடத்திற்கு திருப்தியளிக்கும், என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்
அந்தவகையில் இன்றைய ஆனி மாத அமாவாசை திருவாதிரை நட்சத்திரத்தில் வருவதால் கூடுதல் சிறப்பு பெற்றுள்ளது.
அமாவாசை முன்னிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோயிலுக்குள்ளே காவேரி, சேது மாதவர், மகாலட்சுமி உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னெச்சரிக்கை கருதி, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திப் உத்தரவின் பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீஸார் ராமேஸ்வரம் தீவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போல, பவானி கூடுதுறை, கோவை பேரூர் நொய்யல் படித்துறை, திருச்சி காவிரி ஆறு, தாமிரபரணி ஆறு, தஞ்சாவூர் பாபநாசம் ஆகிய நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“