Advertisment

இப்போ தான் புதுசா காதலிக்க போறீங்களா? கவிஞர் மனுஷ்யபுத்திரன் சொல்லும் 'லவ் அட்வைஸ்'

புதிதாக காதலிப்பவரை எவ்வளவு குறைவாக சந்திக்க முடியுமோ அவ்வளவு குறைவாக சந்தியுங்கள். நீங்கள் அந்தக் காதலுக்கு பொருத்தமற்றவர் என்பதை மறைக்க அது ஒன்றே வழி!

author-image
WebDesk
New Update
kavingnar manushyaputhiran

Kavingnar Manushyaputhiran (Image: Facebook)

தமிழ் நவீனக் கவிஞர்கள் பலரிடமும் தாக்கத்தை உண்டாக்கியவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன். தமிழ்க் கவிதை உலகில் மனுஷ்யபுத்திரனுக்கு இது நாற்பதாம் ஆண்டு.

Advertisment

ஃபேஸ்புக்கில் அவர் தொடர்ந்து எழுதிவரும் கவிதைகள் மிகப் பெரிய வாசகப் பரப்பில் தொடர்ந்து கவனம் பெற்றுவருகிறது.

இப்போது புதிய காதலில் ஈடுபடுபவருக்கு சில வழிகாட்டும் குறிப்புகள் என்ற அவரது முகநூல் பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.

புதிய காதலில் ஈடுபடுபவருக்கு            

சில வழிகாட்டும் குறிப்புகள்:

பெரிய காதல் கடிதங்களையோ

வாட்ஸப் செய்திகளையோ

உடன் அனுப்பாமல் இருப்பது நல்லது

எழுத்துப் பிழைகளும்

வாக்கியப் பிழைகளும்

நீங்கள் படிப்பறிவற்றவர்

என்ற எண்ணத்தை தரக்கூடும்

புதிதாக காதலிப்பவரிடம்

நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தால்

உங்களைப்பற்றிய நல்லெண்ணங்களை

உருவாக்கலாம் என்று நினைத்தால்

பிழை செய்கிறீர்கள்

உங்கள் உலகம் அவ்வளவுதான் என

சலிப்படைய அதுவே காரணமாகிவிடும்

நீங்கள் ஒரு காலிக்கிண்ணமாகிவிடுவீர்கள்

புதிதாக காதலிப்பவரை

எவ்வளவு குறைவாக சந்திக்க முடியுமோ

அவ்வளவு குறைவாக சந்தியுங்கள்

நீங்கள் அந்தக் காதலுக்கு பொருத்தமற்றவர்

என்பதை மறைக்க அது ஒன்றே வழி

புதிதாக காதலிப்பவரிடம்     

உங்கள் வறுமையையோ நோய்மையையோ

பச்சாதாபம்தேடி ஒருபோதும் சொல்லாதீர்கள்

ஒவ்வொரு நிமிடமும்

நீங்கள் மதிப்பிடப்படுகிறீர்கள்

புதிதாக காதலிப்பவர்

தன் பழைய காதல்களைப்பற்றி

உங்களிடம் சொல்லும்போது

பெரிதாக ஆர்வம் காட்டாதீர்கள்

அவர் வெறுமனே

உங்கள் பொறாமையைத் தூண்ட முயற்சிக்கிறார்

புதிதாக காதலிப்பவரை அணுகும்போது

என்ன வாசனைத் திரவியத்தை பயன்படுத்துகிறீர்கள்

என்பதில் கவனமாக இருங்கள்

நிறைய காதல்கள் முறிந்ததற்கு

மலிவான வாசனைத்திரவியங்களே காரணம்

புதிதாக காதலிப்பவர்

வேறுயாரையும் காதலிக்கிறாரா என

துப்பறிய ஒருபோதும் முயலாதீர்கள்

அது நீங்கள் மனமுடைய காரணமாக இருந்துவிடும்

மாறாக அவரது பற்பல காதல்களில்

நீங்கள் கடைசியாக எஞ்சுகிறீர்களா

என்பதை மட்டும் கவனியுங்கள்

புதிதாக காதலிக்கும்போது

உங்கள் பாதங்களை அழுக்கின்றி

சுத்தமாக வைத்திருங்கள்

நகங்களை ஒழுங்காக வெட்டுங்கள்

பற்களில் கறை நல்லதல்ல

முடிந்தவரை மவுத் வாஷ் பயன்படுத்துவது நல்லது

புதிதாக காதலிக்கும்போது

வண்டிக்கு ட்யூ கட்டவில்லை என்பது போன்ற

பிரச்சினைகளை அதில் கொண்டுவராதீர்கள்

காதலுக்கான செலவுகளில்

கணக்குப் பார்க்காதீர்கள்

எப்போதும் நீங்களே

கொடுப்பவராக இருங்கள்

புதிதாக காதலிக்கும்போது

உங்கள் வீட்டைப் பற்றியோ

அங்கே உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை

என்பதைப்பற்றியோ

எதையும் வெளிப்படுத்தாதீர்கள்

முக்கியமாக  உங்கள் வீட்டில் இருப்பவர்கள் பற்றி

அவர்கள் இல்லவே இல்லாததுபோல

குறைவாகப் பேசுங்கள்

புதிதாக காதலிக்கும்போது

நீங்கள் காதலிப்பவரைப் பற்றிய

இடையறாத ஏமாற்றங்களே

உங்களுக்கான அக்கினிப் பரீட்சை

புன்னகையுடன் எரிச்சலைக் காட்டாமல்

அதில் வென்றுவிட்டால்

அந்தக் காதல் உறுதிப்பட்டுவிடும்

புதிதாக காதலிக்கும்போது

நீங்கள் காதலிப்பவர்

உங்களை தந்திரமாக பயன்படுத்துகிறார் என

உங்களுக்குத் தோன்றினால்

நீங்கள் காதலுக்கு தகுதியற்றவர் என்று பொருள்

நிபந்தனையற்று பயன்படத்தானே வந்திருக்கிறோம் என

மனமுவந்து ஒப்புக்கொடுங்கள்

புதிதாக காதலிக்குபோது

நாம் உண்மையாகவே காதலிக்கப்படுகிறோமோ என

நீங்கள் சஞ்சலமடைவது இயல்புதான்

அப்போது நீங்கள் ' ஜிம்' முக்கு

போகத் தொடங்குங்கள்

ட்ரெண்டியான ஆடைகளை அணியுங்கள்

புதிதாக காதலிக்கும்போது

பொதுவாக நீங்கள் அடிக்கடி

அழும் பழக்கம் உள்ளவர் எனில்

அதை முதலில் நிறுத்துங்கள்

காதல் கேளிக்கைகளையே விரும்புகிறது

நீங்கள் ஒரு பாம்பாட்டியாக இருங்கள்

ஒரு வித்தை காட்டுபவனாக இருங்கள்

அழகாக புகைப்படம் எடுக்கத் தெரிந்தவராக இருங்கள்

பயணங்களில் ஆர்வமுள்ளவராக இருங்கள்

காசும் அழகும் உள்ளவராக இருங்கள்

ஜோக்குகள் சொல்பவராக இருங்கள்

நீங்கள் கவிதைகள் எழுதுபவராக மட்டும் இருந்தால்

உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள்

புதிதாக காதலிக்கும்போது

எந்த நேரமும் நீங்கள் கோமாளியாகிவிட

வாய்ப்புள்ளது

ஆங்கில வார்த்தைகளை

பிழையாக உச்சரிப்பதை தவிருங்கள்

இப்படி சிறிய விஷயங்களில் இருந்துதான்

எல்லாம் தொடங்குகின்றன

புதிதாக காதலிக்கும்போது

எந்த நேரமும் நீங்கள் பயனற்றவர் என

அறியப்பட வாய்ப்புள்ளது

அப்போது ஒன்றில்லாவிட்டால்

இன்னொன்றுக்கு பயன்படுவேன் என

உறுதிப்படுத்திக்கொண்டே இருங்கள்

ஆறுமாதத்தில் ப்ரேக் அப்

ஆகப்போகும் காதலுக்கு

உலர்ந்து உதிரப்போகும் காதலுக்கு

இவ்வளவு பிரயாசையா என்று கேட்காதீர்கள்

அந்த நாடகத்தில் நீங்கள்

ஒரு முக்கிய கதாபாத்திரம்

அதை நடியுங்கள்

அந்த அனுபவத்தில் கொஞ்ச  நேரம் இருங்கள்

நாடகம் முடிந்து

அரங்கைவிட்டு

பார்வையாளர்களோடு

சேர்ந்து நடக்கும்போது

இதெல்லாம் நமக்குதான் நடந்ததா என

வியப்புடன் உணர்வீர்கள்

அப்போது நிலவொளி

வீடு வரை உங்களோடு வரும்

நீங்கள் அப்போது உணரும் தனிமை

அதற்குமுன் நீங்கள் வாழ்வில் ஒருபோதும் உணராத

பரிசுத்தமான தனிமையாய் இருக்கும்

21.4.2024

இரவு 7.19

மனுஷ்ய புத்திரன்

இவ்வாறு கவிஞர் மனுஷ்ய புத்திரன் கவிதை முடிகிறது.

இந்த கவிதைக்கு வாசகர்கள் ஒவ்வொரு விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.

அதில் ஒருவர், ‘காதலிக்கும் போது மறைத்து நடித்து பிறகு திருமணம் செய்த பின் அந்த நடிப்பை தொடர முடியாமல் போகும் நிலை வரும் இல்லையா??

அதனால் காதலிக்கும் போதே இயல்பாகவே (தான் தானாகவே) இருப்பது நல்லது..

விருப்பம் இருந்தால் காதலை தொடரட்டும்..

உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது "நீட்" டா ட்ரஸ் பண்ணுவதெல்லாம் காதலிக்கும்போது மட்டுமல்ல எப்போதுமே

செயல்படுத்தலாம். (வயதான பிறகும்)’ என்று பதிவிட்டுள்ளார்.         

மற்றொருவர் தனது கமென்ட்டில், ‘இயல்பாக இருப்பதே காதலில் வெற்றிபெற வழி...

ரொம்ப perfect ஆ இருந்தா எங்கேயோ உடைஞ்சு இங்கே கட்டுப்போட வந்திருக்குன்னு தெரிஞ்சிடும்

இயல்பாக இருங்கள், எல்லா பரிமாணங்களையும் அனுபவிக்கவும், ஏற்றுக்கொள்ளவும், நேசிக்கவும், அனுபவிக்கவும், என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment