/indian-express-tamil/media/media_files/2025/08/24/actress-abitha-2025-08-24-14-36-32.jpg)
Actress Abitha
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் ஒரு சில கதாநாயகிகள் மட்டுமே மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறார்கள். அவர்களின் முகம், நடிப்பு, பாத்திரத்தின் குணாதிசயம் என அனைத்தும் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகி விடுகிறது. அந்த வரிசையில், ‘திருமதி செல்வம்’ தொடரின் மூலம் இல்லத்தரசிகளின் இதயங்களை வென்றவர், நடிகை அபிதா. சுமார் 1000 அத்தியாயங்களுக்கும் மேலாக ஓடிய இத்தொடர், அபிதாவை சின்னத்திரையின் முன்னணி நடிகையாக உயர்த்தியது. இத்தொடரில் நடித்ததற்காக, பல விருதுகளையும் அவர் பெற்றார்.
இப்படி திரையுலகில் புகழ், வெற்றி, பணம் என பல பளபளப்பான பக்கங்கள் இருந்தாலும், அதன் மறுபக்கத்தில் பல கசப்பான அனுபவங்களும், போராட்டங்களும் புதைந்து கிடக்கின்றன. சில சமயங்களில், அது ஒரு கலைஞரின் மன உறுதியையே குலைத்துவிடும் அளவுக்கு பயங்கரமாக இருக்கும். அத்தகைய ஒரு அனுபவத்தைத்தான் நடிகை அபிதா சமீபத்தில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்தார்.
”சினிமாவுல பிஸியா நடிச்சிட்டிருந்த நேரம். திடீர்னு ஒரு நாள் ராத்திரி போன் வந்தது. எடுத்தா, எதிர்முனையில ஒருத்தர் மிரட்டல் தொனியில பேசினார். “உங்களுக்காக ஒரு போஸ்டர் தயார் பண்ணி வச்சிருக்கோம். அதுல ‘ஆடைகளைக் களையத் தயார்’னு போட்டிருக்கோம். அஞ்சே அஞ்சு லட்சம் ரூபா கொடுங்க, இல்லன்னா ஆயிரக்கணக்குல போஸ்டரை ஊரெல்லாம் ஒட்டிடுவோம்”னு மிரட்டினார்.
அந்த வார்த்தைகளை கேட்டதும் எனக்கு தலை சுத்திருச்சு. அவ்வளவு பெரிய தொகைக்கு நான் எங்க போவேன்? ஒருவேளை பணத்தை கொடுத்தாலும், போஸ்டரை ஒட்ட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? ஒரு நடிகையா, பொதுவாழ்க்கையில இருக்கிறவங்களுக்கு தன் இமேஜ் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும். எனக்கு மனசுக்குள்ள ஆயிரம் பயம். ஒரு நிமிஷம், "இதைவிட செத்துடலாம்"னு கூட தோணுச்சு. அந்த அளவுக்கு மன உளைச்சல் ஆயிட்டேன்.
ஆனா, இந்த கஷ்டமான நேரத்துல எனக்கு துணையா இருந்தது என் குடும்பம் மட்டும்தான். என் அக்கா, அம்மா ரெண்டு பேரும் எனக்கு பெரிய பலமா இருந்தாங்க. “கவலைப்படாத, நாங்க இருக்கோம்”னு அவங்க கொடுத்த தைரியம் தான் என்னை நிமிர்ந்து நிக்க வச்சது. அவங்களோட ஆதரவு இல்லன்னா, இந்நேரம் நான் எப்படி ஆயிருப்பேன்னு எனக்கே தெரியல” என்று நடிகை அபிதா அந்த பேட்டியில் அந்த மோசமான நினைவுகளை பற்றி பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.