15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50 சதவீதம் பேர் இன்னும் மாதவிடாய் பாதுகாப்புக்காக துணியைப் பயன்படுத்துவது, தேசிய குடும்ப சுகாதாரம் அமைப்பு (NFHS) நடத்திய சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு, மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
NFHS கூற்றுப்படி, 15-24 வயதுடைய பெண்களிடம் மாதவிடாய் பாதுகாப்பிற்கு எந்த முறையை பயன்படுத்துகிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
ஆய்வு முடிவில், இந்தியாவில், 64 சதவீதம் பேர் சானிட்டரி நாப்கின்களையும், 50 சதவீதம் பேர் துணியையும், 15 சதவீதம் பேர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களையும் பயன்படுத்துவது தெரியவந்தது. ஒட்டுமொத்தமாக, இந்த வயதினரில் 78 சதவீத பெண்கள் மாதவிடாய் பாதுகாப்புக்கு சுகாதாரமான முறையைப் பயன்படுத்துகின்றனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாப்கின்கள், சானிட்டரி நாப்கின்கள், டம்பான்கள், மாதவிடாய் கோப்பைகள் ஆகியவை சுகாதாரமான பாதுகாப்பு முறைகளாகக் கருதப்படுகின்றன.
அசுத்தமான துணியை மீண்டும் பயன்படுத்தினால், உடலில் பல தொற்றுநோய்களின் வெளிபாட்டிற்கு வழிவகுக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.
குருகிராமில் சி.கே.பிர்லா மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அஸ்தா தயாள் கூறுகையில், பல ஆய்வுகள் பாக்டீரியா வஜினோசிஸ் அல்லது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTI) போன்ற இனப்பெருக்க பாதையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைக் காட்டுகின்றன. அவை பெண்ணுறுப்பு உள்ள பகுதியில் நோயை ஏற்படுத்துகின்றன. இது, கர்ப்பம் தரிப்பதில் சிரமங்களையும், குழந்தை குரைப்பிரசவத்தில் பிறப்பது போன்ற சிக்கலை ஏற்படுத்தும்.
மோசமான சுகாதாரம் நீண்ட காலத்திற்கு கர்ப்பப்பை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். மோசமான சுகாதார முக்கிய காரணியாக உள்ளது என்றார்.
NFHS அறிக்கைபடி, பள்ளிக்கு செல்லாத 12 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுடன் ஒப்பிடுகையில், பள்ளிக்கு செல்லும் பெண்களிடம் சுதாதார முறை பின்பற்றுவது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
நகர்ப்புற பெண்களில் 90 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, எழுபத்து மூன்று சதவீத கிராமப்புறப் பெண்கள் மாதவிடாய் பாதுகாப்புக்கான சுகாதாரமான முறையைப் பயன்படுத்துகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பான முறையை பின்பற்றவர்கள் குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியல் வரையறுக்கப்பட்டது. அதில், குறைந்தப்பட்சமாக பீகாரில் 59 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 61 சதவீதமும், மேகலாயாவில் 65 சதவீத பெண்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் பூனம் முத்ரேஜா கூறுகையில், NFHS-5 கல்வி, செல்வம், மாதவிடாய் பாதுகாப்புக்கான சுகாதார முறைகளுக்கு இடையிலான நேரடி தொடர்பைக் காட்டுகிறது.
கிராமப்புறப் பெண்களிடையே மாதவிடாய் பாதுகாப்புக்கான துணிகளைப் பயன்படுத்துவது, நகர்ப்புறங்களில் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போதுஅதிகமாக இருக்கிறது. அவை முறையே 57.2 சதவீதம் மற்றும் 31.5 சதவீதம் ஆகும்.
மிகக் குறைந்த செல்வச் செழிப்பில் உள்ள பெண்கள், உயர் செல்வச் செழிப்பில் உள்ள பெண்களைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகமாக துணிகளைப் பயன்படுத்துகின்றனர். சமூகப் பின்னணி பெரும்பாலும் மாதவிடாய் சுகாதாரத்திற்கான அணுகலை தீர்மானிக்கிறது என்றார்.
மாதவிடாய் பற்றி பேசுவதை தடை செய்வது பெண்களை அவற்றை அணுகுவதையும் தடுக்கிறது. மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த பெண்கள் கல்வி பயில்வது அவசியமாகும். அதேபோல், சமூக விதிமுறைகள் மற்றும் நடத்தைகளை மாற்றுவதற்கான பிரச்சாரங்களும் தேவையாகும்.
சமூக ஆர்வலரும், சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநருமான ரஞ்சனா குமாரி கூறுகையில், மாதவிடாயின் இரண்டு அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும். ஒன்று, மாதவிடாயை அவமானமாக கருதுவது, மற்றொன்று அதை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
பிரதான் மந்திரி பாரதிய ஜனஉஷ்தி பரியோஜனா (பிஎம்பிஜேபி) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள கேந்திராக்களில் சானிட்டரி நாப்கின்கள் வெறும் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உங்களுக்கு, 12 நாப்கின்கள் தேவைப்பட்டால், அதனை வாங்கிட 12 ரூபாய் வேண்டும். அந்த பணத்தை பெற்றோரிடம் கேட்க பெண்கள் கூச்சப்படுகிறார்கள்.
அதேசமயம், பெற்றோரும் அதனை தேவையற்ற செலவாக கருதுகின்றனர். பெண்களின் ஆரோக்கியம் அவசியம் என்பதை பெற்றோரின் ஆலோசனை வழங்குவது அவசியம் என தெரிவித்தார்.
2019-21 க்கு இடையில் 28 மாநிலங்களில் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 707 மாவட்டங்களில் வசிக்கும் 6.37 லட்சம் குடும்பங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil