பெண்களுக்கு எதிரான வன்முறை பல வழிகளில் நிகழ்த்தப்படுகிறது. அப்படியான சமயங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பக்க பலமாய் இருந்து அவள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமை பெற குடும்பத்தினரின் அன்பும், அரவணைப்பும் கடலளவு தேவை. காரணம், அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வருவதற்கே, வெகுநாட்கள் ஆகலாம். சில சமயங்களில் இது வருடக் கணக்கிலான நாட்களை எடுத்துக் கொள்ளும். ஆனால் தனது குடும்பத்தில் இருக்கும் முக்கிய உறுப்பினராலேயே தனக்கு கடும் வன்முறை நிகழ்ந்தது என்பதை எந்தப் பெண்ணால் தாங்கிக் கொள்ள முடியும்? ’இப்படி எல்லாம் நடக்குமா’ என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். அதற்கு ‘நடக்கும்’ என்பது தான் பதில். இந்த பதிலைத் தான் சாந்தியும் சொல்கிறார்.
யார் இந்த சாந்தி? ஆசிட் வீச்சால் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, தனக்கு முன்னால் இருக்கும் சவால்களை உடைத்து, பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். அவருக்கு பக்க பலமாக இருப்பதோ, பி.சி.வி.சி எனும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம். மகளிர் தினத்தில் நியூஸ் 7 தமிழ் சேனலில் பகல் 12 மணி செய்தி வாசிக்கும் வாய்ப்பும் சாந்திக்கு கிடைத்தது. கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்ற நோக்கில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாகவும் பயன்படுத்திக் கொண்டார். சென்னை, அண்ணாநகரிலுள்ள அந்த தொண்டு நிறுவனத்தில் சாந்தியை சந்தித்தோம்.
வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள்: ஓடி வந்து தோள் கொடுக்கும் சென்னை பி.சி.வி.சி
தனக்கு நடந்த வன்முறையைப் பற்றி நம்மிடம் பேசத் தொடங்கினார். “இந்த சம்பவம் 2005-ல் நடந்தது. அப்போது எனக்கு 18 வயது, கல்லூரி இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சொத்துக்கள் விற்பதில் நீண்ட நாட்களாக பிரச்னைகள் இருந்து வந்தது. பெண் பிள்ளை இருக்கிறாள் அதனால் எதையும் விற்கக் கூடாது என்பதில் என் அம்மா உறுதியாக இருந்தார். இதனால் கோபமான அப்பா, ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அம்மா மீது ஆசிட் அடித்து விட்டார். இதனால் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த நானும் பாதிக்கப்பட்டேன். நல்லவேளை தம்பிக்கு எதுவும் ஆகவில்லை.” என்று சாந்தி சொல்லும் போது, அதை நினைத்துப் பார்க்கவே நமக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மேலும் தொடர்ந்தார் சாந்தி, “அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மாவுக்கு 2 கண்களிலும் பார்வை போய்விட்டது. எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை. திருவெற்றியூரில் இருக்கும் அவரை எனது தம்பி பார்த்துக் கொள்கிறான். அந்த விபத்துக்குப் பிறகு, கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு இருப்பவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-வைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். அப்போது இருந்து இவர்கள் எனக்கு பக்க பலமாய் இருக்கிறார்கள்.” என்றார் மகிழ்வுடன்.
”சிகிச்சைகள், மாதம் ஒருமுறை தெரபி, கவுன்சிலிங் என எல்லா விதத்திலும் என்னைப் போல ஆசிட் / தீ காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்.ஜி.ஓ ஆதரவளித்து வருகிறது. பிரச்னைக்கு பிறகு அப்பாவை கைது செய்தார்கள். ஆனால் 3 மாதத்தில் வெளியில் வந்து தன் இஷ்டம் போல் இருக்க ஆரம்பித்து விட்டார். அவரை தொடர்ந்து கண்காணித்து, தண்டனை வாங்கித் தரும் நிலைமையில் நாங்கள் இல்லை. காரணம், எங்களைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது” என்ற சாந்தி தனது படிப்பு மற்றும் வேலை குறித்தும் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.
“விபத்து நடந்த பிறகு பல்கலைக்கழகத்தில் நேரடியாக விண்ணப்பித்து படிப்பை முடித்தேன். நூலகத்திலும், இதே என்.ஜி.ஓ-விலும் வேலை செய்தேன். இப்போது கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததால், ஓய்வில் இருக்கிறேன். 2006-ல் எனக்கு திருமணமாகி, இப்போது 2 மகன்களும் இருக்கிறார்கள். பெரியவன் 8-வதும், சின்னவன் 6-ம் வகுப்பும் படிக்கிறார்கள். என்னையும் பார்த்துக் கொண்டு, அவர்களையும் கவனிப்பது எனக்குப் பெரிய சவாலாக உள்ளது.” என்ற சாந்தி தன்னைப் போல் ஆசிட் / தீ காயத்துடன் இருக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்களையும் கூறினார்.
“முதலில் நம்மை நாம் ஏற்றுக் கொண்டு மதிக்க வேண்டும். வெளியில் போனால் மற்றவர்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற பயம், தான் நமக்கு முதல் எதிரி. நடந்ததை நினைத்து கவலைப்பட்டு ஒரே இடத்தில் தங்கி விடக்கூடாது. நாளைக்கு நமக்கு ஒரு பிரச்னை என்றால் நம்மை வேடிக்கைப் பார்த்த யாரும் வர மாட்டார்கள். அதனால் நமது பொறுப்புணர்ந்து நாம் தான் புத்திசாலியாக செயல்பட வேண்டும். என்னைப் போல் இருக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இன்னொன்று, என் மகன்களை பெண்களை மதிக்கும்படி நன்றாக வளர்க்க வேண்டும். காரணம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆண்களால் தான் நடைபெறுகிறது. பெண்களைப் பற்றி சரியான புரிதலும், மதிப்பும் இல்லாததாலேயே இப்படியெல்லாம் நடக்கின்றன. ஆகையால் எனது மகன்களை சிறந்த ஆண்களாக இந்த சமூகத்தில் அடையாளப்படுத்த வேண்டும் என எப்போதுமே எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும்” என்ற சாந்தி பாஸிட்டிவிட்டியைப் பரப்பினார்.
படங்கள் - ஷாலினி சந்திரசேகர்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.