பயறு முதல் பாகற்காய் வரை… மாடித்தோட்ட ரகசியம் கூறுகிறார் மோகன்லால்

Actor mohan lal home organic farming: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், இயற்கை முறையில் விவசாயம் செய்துள்ளது குறித்து விவரித்துள்ளார்

கேரள மாநிலத்தில் மாடித்தோட்டம் மற்றும் இயற்கை விவசாயத்துக்காக அம்மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் அறிவித்துள்ளது கேரள அரசு. மேலும் அரசு சார்பில் காய்கறி கொள்முதல் நிலையங்களும், விற்பனை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஆன்லைன் போர்ட்டல்கள் கூட ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் இருந்தே கேரளா முழுவதும் மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைப்பது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் மோகன்லால் தலையில் வெள்ளை நிற துண்டோடு,  இடுப்பில் கறுப்பு நிற வேட்டியை மடித்துக்கட்டிவிட்டுக்கொண்டு விவசாயியைப் போன்று மாஸாக எண்ட்ரி கொடுக்கிறார். பின்னர் பைப்பை எடுத்து காய்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கிறார் மோகன்லால். அடுத்ததாக ட்ரே மற்றும் கத்தரிக்கோலுடன்  தோட்டத்துக்குள் சென்று தக்காளி, கத்திரிக்காய், சுரைக்காய் எனக் காய்கறிகளைப் பறித்து ட்ரேயை நிரப்புகிறார். ஒரு பழுத்த பாகற்காயை பார்த்து ”இது விதைக்காக விடப்பட்ட பாகற்காய். இதை நன்றாக உலர்த்தி அதன் விதையை எடுத்து நடவு செய்வோம்” எனக் கூறியபடி அதைப் பறிக்கிறார் மோகன்லால்.

மேலும் அந்த வீடியோவில், பயிறு, பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், தக்காளி, வெண்டைக்காய், பச்சை மிளகாய், மரவள்ளிக் கிழங்கு எனப் பலவகை காய்கறிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்துள்ளது குறித்து விவரித்துள்ளார் மோகன்லால். களைகள் வளருவதைத் தவிர்க்கும் விதமாகத் தரையில் ஷீட் விரிக்கப்பட்டு, தொட்டியில் பெரும்பாலான காய்கறி செடிகள் நடப்பட்டுள்ளன.அந்த வீடியோவில் பேசியிருக்கும் மோகன்லால், “எர்ணாகுளம் எளமக்கரையில் உள்ள எனது வீடு இது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்த சிறிய இடத்திலிருந்து எங்களுக்கு தேவையான காய்கறிகளை விளைவித்து எடுக்கிறோம். பாகற்காய், பயறு, வெண்டைக்காய், தக்காளி, பச்சை மிளகாய், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சோளம் எல்லாம் உண்டு.

சிறிய இடத்தில் நமக்கு தேவையான எல்லா காய்கறிகளையும் விளைவிக்கலாம். அதற்கு அனைவரும் முன் வர வேண்டும். இடம் இல்லாதவர்கள் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கலாம். நாங்கள் புதிதாக சைனீஸ் மிளகு போன்றவை நடவு செய்ய இருக்கிறோம். காலையில் செடிகளுக்குத் தண்ணீர் விடுவது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.நான் இங்கு வரும்போது இந்தத் தோட்டத்தில் விளையும் காய்கறிகளைத் தான் பயன்படுத்துவேன்” எனக் கூறும் மோகன் லால், அவரது தோட்டத்தைப் பராமரிப்பவரிடம் சில செடிகள் குறித்து கேட்டு தெரிந்துகொள்கிறார். கடைசியாக ஒரு தக்காளிச் செடியை நட்டு வைக்கும் மோகன்லால், ”40-45 நாள்களில் இதிலிருந்து தக்காளி பறிக்கலாம்” எனக்கூறுவதுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor mohan lal home organic farming video

Next Story
சாக்லேட், முந்திரி, கீரை, காளான்… உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகள் தெரியுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com