/indian-express-tamil/media/media_files/2025/08/29/actress-deepa-shankar-2025-08-29-10-55-32.jpg)
Actress Deepa shankar
கலையுலகில் தன் தனித்துவமான நகைச்சுவை உணர்வாலும், யதார்த்தமான நடிப்பாலும் தமிழ் மக்களின் மனதில் "தீபா அக்கா"வாக இடம் பிடித்தவர் தீபா சங்கர். சின்னத்திரை சீரியல்களில் தொடங்கி, வெள்ளித்திரையில் டாக்டர், கடைக்குட்டி சிங்கம், தலைவன் தலைவி போன்ற திரைப்படங்கள் வரை, அவர் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையில் அவர் சிரிப்பலைகளை உருவாக்குவது போலவே, அவரது நிஜ வாழ்க்கை பயணமும் பல போராட்டங்களையும், உணர்வுபூர்வமான தருணங்களையும் உள்ளடக்கியது.
துணை நிற்கும் கணவர் ஷங்கர்
தீபா சங்கரின் வெற்றிப் பயணத்தில், அவரது கணவர் ஷங்கரின் பங்கு மிக முக்கியமானது. கலைத்துறையில் இருக்கும் பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு நடிப்பது கடினம் என்ற பொதுவான கருத்து நிலவும் சூழலில், ஷங்கர் அதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறார். தீபாவின் கனவுகளுக்கு அவர் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார். இந்த தம்பதிக்கு தீபாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தீபா படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும்போது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும், சமையல், துணி துவைப்பது, வீட்டைப் பெருக்குவது என ஆண்-பெண் வேலை எனப் பாகுபாடு பார்க்காமல் ஷங்கர் செய்வதாக தீபா பல நேர்காணல்களில் பெருமையாகக் கூறியிருக்கிறார். இதுவே அவர்களது அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.
இந்நிலையில் தான் கல்யாணம் ஆகி வந்த புதிதில் மாமியார் வீட்டில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று செய்த விஷயங்களை தீபா ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
"கல்யாணம் முடிச்சு சென்னைக்கு வந்தோம். வந்தவுடனே ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு பேசிக்கிட்டு ஏற்பாடு பண்ணினாங்க. இவங்களா பேசி இன்னிக்கு சாயந்திரம் உங்களுக்கு ரிசப்ஷன்’னு சொன்னாங்க. நான் கூட எங்க வீட்டுலேயே யார்ட்டயும் சொல்லாம வருத்தத்துல இருந்தேன். ஆனா சரி, எல்லாரும் சேர்ந்து ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு நினைச்சுக்கிட்டேன். ரிசப்ஷன் நிகழ்ச்சி முடிஞ்சது. சாப்பாடு எல்லாம் ஆர்டர் பண்ணியிருந்தாங்க. அவ்வளவு பாத்திரங்களும் சேர்ந்திருச்சு. புதுப் பொண்ணு என்ன போய் பாத்திரமா கழுவ சொன்னாங்க.
அந்த ஒரு நாள், நான் நல்ல வேலைக்காரின்னு நிரூபிக்க, நல்ல பேர் எடுக்கறதுக்காக அவ்வளவு பாத்திரத்தையும் விளக்கு விளக்குனு விளக்கிட்டு இருந்தேன். மறக்கவே மாட்டேன். கல்யாணம் ஆகி வந்தா என்னைய பாத்திரமா விளக்க போட்டீங்கனு இப்போவும் என் வீட்டுக்காரருக்கிட்ட சொல்லிக் காட்டுவேன். இதுல ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். அந்த ஒரே ஒரு நாள் மட்டும்தான் நான் பாத்திரம் கழுவினேன். அதுக்கப்புறம் பாத்திரம் கழுவுற பொறுப்பு என் கணவர்கிட்ட போயிருச்சு. கல்யாணம் ஆன புதுப் பெண்களுக்கு ஒன்னே ஒன்னு சொல்றேன்.
கல்யாணம் முடிஞ்சதும், மாமியார் வீட்டுல நல்ல பேர் வாங்கணும்னு கண்டதும் கண்டபடி வேலை செஞ்சு காட்டாதீங்க. அவ்வளவுதான். "நாங்களா செய்யச் சொன்னோம்? நீயாவே இழுத்துப் போட்டு வேலை செஞ்ச"ன்னு சொல்லுவாங்க”, என்று தனக்கே உரிய கலகலப்புடன் தீபா அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.