இவரை மதுமிதா என்று சொல்வதை விட ஜாங்கிரி என்று சொன்னால் தான் நம்ம ரசிகர்களுக்கு உடனே தெரியும். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் வாயில் கிளிப் மாட்டிக் கொண்டு அனாயசமாக காமெடி செய்திருப்பார் மதுமிதா.
அது தான் அவரது முதல் படம் என்றால் சத்தியமாக யாராலும் நம்ப முடியாது. ஒருவர் அழுது புரண்டு கூட உருக்கமாக நடித்துவிடலாம், ஆனால் காமெடி செய்வது அவ்வளவு ஈஸி அல்ல. அதனை கச்சிதமாக செய்து கவனிக்க வைத்தவர் மதுமிதா.
பிறகு 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் அவரின் பேபி கேரக்டர் கிளாப்ஸ் அள்ளியது. சிறந்த காமெடி நடிகைக்காக விகடன் விருதையும் மது பெற்றார். அதன் பிறகு ஆண்டுக்கு ஆறேழு படங்கள் என இப்போது வரை செம பிஸியாக வலம் வருகிறார்.
சினிமா டிராக்கில் பயணம் செய்தாலும், தொலைக்காட்சி பக்கமும் இப்போதே ஸ்டிராங்காக துண்டு போட்டு வைத்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், இவரது அடித்தளமே டிவி தான். 2004 முதல் 2007 வரை லொள்ளு சபாவில் தான் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
பிறகு மாமா மாப்ளே, பொண்டாட்டி தேவை, அத்திபூக்கள், அழகி, மடிப்பாக்கம் மாதவன் என்று இவரது டிவி லிஸ்டும் நீண்டுக் கொண்டே செல்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற மதுமிதா 54 நாட்கள் வரை தங்கியிருந்தார் அல்லது தங்க வைக்கப்பட்டார். தற்கொலை முயற்சி செய்ததால் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று கூறப்பட்டது.
பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே இவரது சக போட்டியாளர்கள் யாரும் பெரிதாக ஆதரவு கொடுக்கவேயில்லை. மக்கள் அதிகம் வெறுத்த சிலருடன் கூட சக போட்டியாளர்கள் நெருக்கம் காட்டினர். ஆனால், மதுமிதா அங்கு ஒதுக்கப்பட்டார் என்றே கூறப்பட்டது.
வெளியே வந்த பிறகும் சம்பளம் முழுமையாக கொடுக்கப்படவில்லை என்று விஜய் டிவி நிர்வாகத்துடன் துணிச்சலாக மோதினார் மதுமிதா. பிக்பாஸ் ஷோ முடிந்த பிறகு போட்டியாளர்கள் அனைவரும் ஒருசேர அழைக்கப்பட்ட போதும் சரவணனும், மதுமிதாவும் அழைக்கப்படவில்லை.
மிகச் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, இன்று திரைத்துறையில் ஓரளவுக்கு தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. அதுவும், ஒரு பெண்ணாக...!