/indian-express-tamil/media/media_files/2025/08/14/actress-jaya-seal-family-2025-08-14-17-26-35.jpeg)
Actress Jaya Seal family
சினிமா உலகில் சில முகங்கள் நம் நினைவில் என்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும். அப்படி ஒரு முகம் தான் ஜெய சீல். ‘பெண்ணின் மனதைத் தொட்டு’. படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நடிகை. இதில் வரும் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா" பாடல் இன்றும் பலரின் விருப்பமான பாடலாக உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு, சினிமா உலகிலிருந்து விலகி இருந்த ஜெயா, தனது முதல் காதலான நடனத்தை கைவிடவில்லை. தொடர்ந்து பரதநாட்டியம் பயிற்றுவித்தும், பல மேடைகளில் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சினிமா உலகிலிருந்து விலகியிருந்தாலும், கலை உலகில் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த 25 ஆண்டு கால நினைவுகளைப் பற்றி, அவரே தன் இதயத்திலிருந்து பேசுகிறார்.
ஒரு நிஜமான கனவு:
"பெண்ணின் மனதை தொட்டு" திரைப்படத்தில் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். அந்த கதாபாத்திரம் மிகவும் எளிமையானது, ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டது. மருத்துவர் ஆவது என் கனவு. ஆனால், மூன்று படங்களில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தது, என் கனவை நிஜமாக்கியது. அந்த வகையில், "பெண்ணின் மனதை தொட்டு" திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல்.
"குக்கூ" பாடல் படமாக்கப்பட்ட விதம், இப்போதும் என் மனதை விட்டு நீங்கவில்லை. அந்தப் பாடலில், நடன அசைவுகள் மிகவும் அழகாகவும், கலைநயத்துடனும் அமைந்திருந்தது. இது ஒரு மறக்க முடியாத அனுபவம். பிரபுதேவா போன்ற ஒரு நடன சூறாவளியுடன் நான் நடனமாட வேண்டும் என்றதும், ஆரம்பத்தில் பயம் இருந்தது. ஆனால், படிப்படியாக நான் அவரைப் போலவே, நடனத்தை ரசித்து ஆட ஆரம்பித்தேன். அவருடைய நடன நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது, என் நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். நடிகர் சரத்குமார், கே. விஸ்வநாத் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியது, எனக்குக் கிடைத்த பெரிய பாக்கியம். படப்பிடிப்பில், நடிகர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவது, அரட்டை அடிப்பது போன்ற தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளன. நடிகர் விக்ரம் மிகவும் அர்ப்பணிப்புடன், அனைவரிடமும் பேசிப் பழகும் ஒரு நல்ல நடிகர்.
மொழியைத் தாண்டிய உணர்வு:
படப்பிடிப்பின் போது எனக்குத் தமிழ் தெரியாது. எனது ஹேர்-டிரெஸ்ஸர் மற்றும் உதவி இயக்குனர் எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தனர். மொழியைத் தாண்டி, என் உணர்வுகளை வெளிப்படுத்த நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், கிஷோர் என்ற படக்குழு உறுப்பினர் என்னைப் பார்த்து, "நீங்கள் நடிகை சாவித்திரியைப் போல உணர்வுகளை வெளிப்படுத்துகிறீர்கள்" என்று சொன்னார். அந்தப் பாராட்டு, எனக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது.
வாழ்க்கையின் புதிய அத்தியாயம்:
இசையமைப்பாளர் பிக்ரம் கோஷை மணமுடித்து, மும்பையில் இருந்து கொல்கத்தாவுக்கு நான் குடிபெயர்ந்தேன். எங்களுக்கு ஆதித் மற்றும் அரப் என இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பம், குழந்தைகள் என என் வாழ்க்கை புதிய அத்தியாயத்தை அடைந்தது. கணவர் விக்ரம் கோஷ், இதுவரை 55-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார், மேலும் இரண்டு முறை ஆஸ்கர் போட்டிக்கும் அவரது பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மகன்களுக்கும் இசை மீது ஆர்வம் உள்ளது.
மீண்டும் திரைக்கு வருவேனா?
"நல்ல, அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் கிடைத்தால், மீண்டும் தென்னிந்தியத் திரைப்படங்களில், குறிப்பாக தமிழில் நடிக்க ஆசை. சென்னையில் "ஆண்டாள்" என்ற என் நடன நாடகத்தை அரங்கேற்றவும் விரும்புகிறேன்,” என்று ஜெயா சீல் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.