/indian-express-tamil/media/media_files/2025/08/29/actress-kasthuri-2025-08-29-21-22-37.jpg)
Actress Kasthuri
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 90-களில் கனவு நாயகியாக வலம் வந்த நடிகை கஸ்தூரி, வெறும் நடிகை மட்டுமல்ல, ஒரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை. பள்ளிப் படிப்பில் முதலிடம் பிடித்த மாணவியாக, மிஸ் மெட்ராஸ் அழகிப் பட்டத்தை வென்றவராக, சிறந்த ஆளுமைத் திறனுடன் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவராக, குமுதம் இதழில் "கீப் இட் சிம்பிள் ஸ்டூபிட்" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியவராக என பல்வேறு தளங்களில் தனது திறமையை நிரூபித்தவர்.
சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு, "தமிழ் படம்" (2010) திரைப்படத்தில் ஒரு குத்துப்பாடல் மூலம் மீண்டும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்கள், துணை வேடங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் "டிடி நெக்ஸ்ட் லெவல்" படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
திரைப்படத் துறையைத் தாண்டி, சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் தனது கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்தும் ஒரு சமூக ஆர்வலராகவும் அறியப்படுகிறார் கஸ்தூரி. சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன. பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு, தனது தைரியத்தையும், நேர்மையையும் வெளிப்படுத்தினார்.
சமீபத்தில் மிஸ் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கஸ்தூரி தன்னுடைய புடவை கலெக்ஷன் பற்றி பகிர்ந்து கொண்டார்.
” லட்சம் ரூபா கொடுத்து கூட நீங்கள் புடவை வாங்கலாம். என்ன மாதிரி இருநூறு ரூபாய்லயும் வாங்கலாம். சட்டை மட்டும் உங்களால வாங்க முடியாதுங்க, ஆனா புடவை வாங்கலாம். நூறு ரூபாக்கு கூட புடவை கிடைக்கும். ஆனா ஒரு சட்டை கிடைக்குமான்னு தெரியல.
என்கிட்ட குறைந்தபட்சம் இருநூறு ரூபா புடவை இருக்கு. அதிகபட்சம் எவ்வளவுன்னு கேட்டா, என் கல்யாணத்துக்கு எடுத்தது. அந்த காலத்துல முப்பத்தேழாயிரம் ரூபா. எனக்கு கல்யாணமாகி இப்போ இருபத்திநாலு வருஷம் ஆச்சு. இப்போ அதே மாதிரி புடவை எடுக்கணும்னா லட்சம் ஆகும்.
எங்கிட்ட எண்ணிலடங்காத புடவைகள் இருக்கு. என் பாட்டியோட புடவைகள், என் தாயாரோட புடவைகள், இப்போ என்னோட புடவைகள்... மூன்று தலைமுறை புடவைகளும் இப்போ என்கிட்ட தான் இருக்கு. இருபது வருஷம் பழைய உடைகளெல்லாம் வச்சிருக்கேன். இப்போவும் அப்படியே எனக்கு ஃபிட் ஆகுது.
இப்போ நான் ஒரு தெலுங்கு தொலைக்காட்சி நாடகத்தில் நடிச்சேன். அதுல தினசரி ஒரு புடவை தேவைப்பட்டது. அதுக்காக மட்டும் நான் வாங்குன புடவைகள் எழுநூற்றி முப்பது”, என்று கஸ்தூரி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.