உடல் எடை குறைப்பு என்பது மிகுந்த சவாலான காரியம் என உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தோன்றும். உண்மையை சொல்ல வேண்டுமானால் உடல் எடை குறைப்பு என்பது மிக எளிமையாக அரங்கேறும் நிகழ்வு கிடையாது. இதற்காக, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், சீரான உடற்பயிற்சி என பல்வேறு விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டி இருக்கும்.
இவற்றை முதலில் செய்து பார்க்கும் போது கடினமானதாக இருக்கும். ஆனால், சில நாட்களிலேயே இவை நம் உடல் நலனுக்கு ஏற்றார் போல் மாறிவிடும் தன்மை கொண்டவை. இவை எடை குறைப்பு மட்டுமின்றி நம் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். அந்த வகையில், தான் எடை குறைப்பில் பின்பற்றிய முக்கியமான வழிமுறையை நடிகை கிருத்திகா பகிர்ந்து கொண்டார்.
பெரும்பாலும் தனது இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விடுவதாக நடிகை கிருத்திகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்து விடுவதாகவும் அவர் கூறியுள்ளார். தொப்பையை குறைப்பதற்கு இது பெரிய அளவில் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலும் இரவு சாப்பிட்ட உடன் தூங்கி விடும் வழக்கத்தை அனைவரும் கடைபிடிப்பார்கள். இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதுடன், உடல் எடையையும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், சாப்பிட்டு முடித்த உடன் அதிகமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பலர் பின் தொடர்வார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என நடிகை கிருத்திகா அறிவுறுத்தியுள்ளார்.
சாப்பிட்டு முடித்த உடன் தேவைக்கேற்ப மட்டும் தண்ணீர் குடித்து விட்டு, சுமார் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அதிகமாக குடிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது செரிமான மண்டலம் சீராக வேலை செய்ய உதவும் என நடிகை கிருத்திகா குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.