/indian-express-tamil/media/media_files/2025/08/26/actress-lakshmi-2025-08-26-22-25-01.jpg)
Actress Lakshmi
கண்ணாடி போன்ற கண்களும், கள்ளமில்லாப் புன்னகையும், இயல்பான நடிப்பும் என தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை லட்சுமி. 1968-ல், "ஜீவனாம்சம்" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் லட்சுமி. முதல் படத்திலேயே இவரின் நடிப்புத் திறமையும், அழகுணர்வும் ரசிகர்களைக் கவர்ந்தன. அதன் பிறகு, சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
ஒரு நடிகையாக லட்சுமியின் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், "சில நேரங்களில் சில மனிதர்கள்" படத்திற்காக அவருக்குக் கிடைத்த தேசிய விருது. ஒரு தமிழ் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையைப் பெற்றவர் லட்சுமி.
லட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. தனது 17 வயதில் பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட லட்சுமிக்கு, ஐஸ்வர்யா என்ற மகள் பிறந்தார். சில வருடங்களிலேயே பாஸ்கரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு, நடிகர் மோகன் சர்மாவுடன் ஏற்பட்ட உறவும், விவாகரத்தில் முடிந்தது.
நடிகர் சிவச்சந்திரனுடன் இணைந்து நடித்த "என் உயிர் கண்ணம்மா" திரைப்படத்தின்போது, இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதல், திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு சம்யுக்தா என்ற ஒரு மகளும் உள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மகளாக, சகோதரியாக, காதலியாக, மனைவியாக எனப் பல கதாபாத்திரங்களில் நடித்த ஒரே நடிகை லட்சுமிதான். இவருடைய தாயார் குமாரி ருக்மணியும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சிவாஜி கணேசன் மீதான தன் அன்பு குறித்து லட்சுமி ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசினார்.
”படையப்பா படத்துல நடிக்க மாட்டேன்னு சொன்னேன். அப்புறம் இயக்குனர் ரவி கட்டாயப்படுத்தினதுனால, அதுல நடிக்க ஒத்துகிட்டேன். அந்தப் படத்துல சிவாஜிக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது. ஏன்னா, சிவாஜி சாருக்கு அதுதான் கடைசி படம்.
சினிமாவையும் தாண்டி சிவாஜி சார் கூட எனக்கு நெருக்கமான பந்தம் இருந்தது. அவரு வீட்டுக்கு அடிக்கடி போய் வருவேன். அப்போ ஒரு நாள் அவரு எனக்கு ஒரு அறிவுரை சொன்னார். அதுதான் இப்போ வரைக்கும் நான் பின்பற்றுறேன். அதை நீங்களும் தெரிஞ்சிக்கணும்னு நான் ஆசைப்படுறேன்.
ஒருத்தரை வேண்டாம்னு சண்டை போட்டு ஒதுக்கினால், அந்த உறவு திரும்பவும் கிடைக்காது. இன்னைக்கு ஒருத்தரை வேண்டாம்னு ஒதுக்கிட்டோம்னா, திரும்ப அந்த உறவு நமக்கு தேவைப்படும்போது, அவங்க ரொம்ப தூரம் போயிருப்பாங்க. அதனால, எந்த ஒரு உறவையும் ரொம்ப ஈஸியா விட்டுடாதீங்க’னு சொன்னாரு. அந்த அட்வைஸ நான் இப்போவரை கடைபிடிக்கிறேன்”, என்று லட்சுமி அந்த நிகழ்ச்சியில் நா தழுதழுக்க பேசியது அங்கு கூடியிருந்தோர் கண்களை ஒரு கணம் கலங்கச் செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.